சிவகங்கை மாவட்டத்தில் 146 பள்ளிகள் மூடலா; 292 ஆசிரியர்களுக்கு சிக்கல்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 10 க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் 146 அரசு பள்ளிகளை மூடும்நிலை ஏற்பட்டதால், 292 ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆங்கில மோகத்தால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலத்தில் 10க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் 890 பள்ளிகளை மூட கல்வித்துறை முடிவு செய்தது. அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தில் 146 பள்ளிகள் மூடும்நிலை உள்ளது. இதில் 29 பள்ளிகளில் ஐந்தும், அதற்கு கீழே மாணவர்கள் உள்ளனர். ஏழு பள்ளிகளில் 2 மாணவர்களே படிக்கின்றனர். இப்பள்ளிகளில் பணிபுரியும் 292 ஆசிரியர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டத்தில் 729 அரசு தொடக்கப் பள்ளிகள் உள்ளன. பத்துக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில், செப்டம்பருக்குள் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது. எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால் அப்பள்ளிகள் மூடப்படும்.ஆசிரியர்களும் பணி நிரவல் செய்யப்படுவர். போதிய காலிப்பணியிடங்கள் இல்லாததால், வெளி மாவட்டங்களுக்கு மாற்றும் நிலை உள்ளது, என்றார்.