1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு வீடியோ, ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம்


தமிழகத்தில் 1, 6, 9, 11 ஆகிய 4 வகுப்புகளுக்கு வருகிற கல்வி ஆண்டில் (2018-2019) மாணவர்கள் பாடப்புத்தகங்களை விரும்பி படிக்கும் வகையில் வீடியோ மற்றும் ஆடியோ வசதியுடன் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னையில் பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் த.உதயச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளிக்கூட அளவில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக இந்தியாவில் சிறப்பான பாடப்புத்தகங்களை கொண்டுள்ள முக்கிய மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர் உள்பட பல வெளிநாடுகளில் பாடப்புத்தகங்கள் எவ்வாறு உள்ளன என்று முதலில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் உள்ள நல்ல கருத்துகள் மட்டும் எடுக்கப்பட்டு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும், ஒவ்வொரு பாடத்திலும் அதை விரிவாக மாணவர்கள் படிக்க விரும்பினால் அதற்க ான புத்தகங்களின் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் படிக்கலாம். அதன் காரணமாக ஒவ்வொரு புத்தகத்திலும், ஒவ்வொரு பாடத்திலும் வார்த்தைகள் அகராதி போல இடம் பெற்றுள்ளன. அதாவது தமிழ்மொழியில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்ட அர்த்தங்கள் இடம் பெற்றுள்ளன. அவை பாடத்தின் பின்புறத்திலும் மட்டுமல்ல, புத்தகத்தின் பின்பக்கத்திலும் இடம் பெற்று இருக்கிறது.

11-வது வகுப்பு, 12-வது வகுப்பு மாணவ-மாணவிகள் 'நீட்' உள்ளிட்ட போட்டித் தேர்வை எதிர்கொள்ள பாடப்புத்தகங்களில் கடந்த சில ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களுடன் இடம் பெற்றுள்ளன. பாடங்கள் அனைத்தும் மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில் பல வண்ணங்களில் அமைக்கப்பட்டு இருக்கிறது. 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அடுத்து என்ன படித்தால் நல்லது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த படிப்புகளின் முழு விவரமும் கொடுக்கப்பட்டுள்ளன.

மருத்துவம், என்ஜினீயரிங் மற்றும் நிறைய படிப்புகள் உள்ளன. என்ன படிப்பை எங்கே படிக்கலாம் என்ற விவரமும் தொகுத்து தரப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் மாணவ- மாணவிகள் மேல்படிப்பை மேற்கொள்வது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். பாடங்களில் விரைவு கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை இணையதளம் கொண்ட செல்போனில் படம் எடுத்து அதை செயல்படுத்தினால் அதற்குரிய வீடியோ மற்றும் ஆடியோவை காணலாம். அவை அனைத்தும் பாடத்துடன் இணைந்ததுதான். அந்த விரைவு கோட்டை பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அதாவது வீடியோ மற்றும் ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம் அமைந்திருக்கிறது. பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை வீடியோ மற்றும் ஆடியோ வாயிலாக வழங்கினால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து படிப்பார்கள். தொழிற்கல்வி மாணவ- மாணவிகளுக்கு பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு 20 வருடங்கள் ஆகி விட்டது. எனவே அந்த பாடத்திட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதிகம் கம்ப்யூட்டர் படிக்கும்படி பாடத்திட்டம் உள்ளது.

அடிப்படை எந்திரவியல், அடிப்படை பொறியியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்அணு பொறியியல், அடிப்படை கட்டிட பொறியியல், ஊர்தி பொறியியல், நெசவியல், செவிலியம், வேளாண் அறிவியல் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளில் நிறைய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் மாணவர்களின் அறிவு சிந்தனையை தூண்டி வேலை வாய்ப்பை முன்நிறுத்தியும் போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதலில் மாநில அளவில் ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு மாவட்டத்தின் முன்னணி ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும். அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பார்கள். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் பணி பாதிக்காத வகையில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும். பயிற்சி அளிக்க அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.