+1,+2 மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


தமிழகத்தில் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இதுவரை இருந்த கணினி அறிவியல் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: - தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் மேல்நிலை பள்ளிகளில் உள்ள கணினி அறிவியல் பாடம் அவர்கள் பயிலும் துறைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் என்ற பெயரில் ஒரே மாதிரியான பாடம் திட்டம் இதுவரை இருந்து வந்தது. இந்த நிலையில், கலைப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு கணினி பாடத்திட்டம் கடினமானதாக இருப்பதாகப் புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து, மாணவர்கள் பயிலும் துறைக்கு ஏற்ப தற்போது மூன்று பிரிவுகளாக கணினி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதில், அறிவியல் துறையில் பயிலும் மாணவர்களுக்குக் கணினி அறிவியல் என்ற பெயரிலும், கணக்குப் பதிவியல் மற்றும் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு ஏதுவாக டேலி அடங்கிய கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்றும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், வொகேஷனல் எனும் தொழில்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு கணினித் தொழில்நுட்பம் என பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த கல்வி ஆண்டு முதல் மேல்நிலை பள்ளிகளில் உள்ள 11-ஆம் வகுப்பிற்கு இந்த மாற்றம் நடைமுறை படுத்தப்படும் என்றும் அடுத்த கல்வி ஆண்டு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடதிட்டத்தின் மாற்றம் அமல்படுத்தப்படும் என்றும் பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.