18 ஆண்டுகளாக, `தமிழ் வாசித்தலில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்' எனும் தலைப்பில் ஆய்வில் ஈடுபட்டு வரும்அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை!


சுழி, பிறை, கீழ் வளைவு, நேர் கீற்று, படுக்கைக் கீற்று... எனத் தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்களை மிருதுளா எனும் சிறுமி சிறிதும் தயக்கமில்லாமல் நேர்த்தியாகச் சொல்கிறாள்.

சுழி, கீழ்ப்பிறை, படுக்கைக்கோடு, நேர்க்கோடு... என 'அ' வரும் வரி வடிவங்களைச் சொல்லிக்கொண்டே கரும்பலகையில் எழுதுகிறான் ஶ்ரீதர். ஜெகதீஷ் எனும் சிறுவன் கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் வரி வடிவங்களைத் தவறில்லாமல் சொல்கிறான். யூடியூபில் பலரால் பார்க்கப்படும் வீடியோவில் உள்ளவை இவை.




மிருதுளா, ஶ்ரீதர், ஜெகதீஷ் உள்ளிட்டோர் நான்காம், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அல்ல. அங்கன்வாடி மையங்களுக்குச் செல்லும் மழலைப் பட்டாளம்தான். ஆனால், இவ்வளவு தெளிவாக எப்படி தமிழ் எழுத்துகளை உச்சரிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முயன்றோம். இதற்குக் காரணமான அரசுப் பள்ளி ஆசிரியை மு.கனகலட்சுமியிடம் பேசினோம்.


"சென்னை ஷெனாய் நகரின் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். நான் பணியில் இணைந்து 21 வருடங்களாயிற்று. கடந்த  18 ஆண்டுகளாக, `தமிழ் வாசித்தலில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்' எனும் தலைப்பில் ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன். என்னைப் பொறுத்தவரை தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வது மிக மிக எளிது. 40 நாள்கள் பயிற்சி எடுத்தாலே தமிழைத் தவறின்றி, தெளிவாகப் பேசவும் எழுதவும் முடியும்.

குழந்தைகளின் மூளை வளர்ச்சி மூன்று - ஆறு வயதுகளிடையே அபரிமிதமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கூற்றை அடிப்படையாகக்கொண்டே தனியார் பள்ளிகள் கே.ஜி வகுப்புகளைத் திட்டமிட்டுள்ளனர். அந்த வயதில் பயிற்றுவிக்கப்படும் மொழியைக் குழந்தைகள் எளிதாக மனதில் பதிய வைத்துக்கொள்வார்கள். நம்முடைய அரசு இந்த வயது குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களைச் சிறப்பாக நடத்தி வருகிறது. அங்கு வரும் குழந்தைகளுக்கு மாறுபட்ட பயிற்சி அளித்தால் என்ன என்ற என் யோசனைக்குச் செயல் வடிவம் கொடுத்தது அந்த வீடியோக்கள்.


திருவண்ணாமலை நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள ஏழு அங்கன் வாடி மையங்களையும் சேர்ந்த குழந்தைகளுக்கு என்னுடைய பாணியில் தமிழ் எழுத்துகளைக் கற்றுத்தந்தேன். அதாவது, வரி வடிவங்களை முதலில் கற்றுத் தர வேண்டும். அதன்பின் எழுத்தை அறிமுகப் படுத்தும்போது சுலபமாகக் கற்றுக்கொள்வார்கள். ஆங்கிலத்திலும் இந்த முறையைத்தான் பின் பற்றுகின்றனர். சுமார் 25 நாள்கள் கொண்ட பயிற்சியில் இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் கலந்துகொண்டனர். நான் எதிர்பார்த்ததை விடவும் குழந்தைகள் விரைவாகக் கற்றுக்கொண்டனர்.


-நன்றி விகடன்