பிளஸ் 1 வகுப்பு சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான மாணவர்கள் கலைப்பிரிவுகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், அப்பிரிவில் கூடுதல் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியானது. மாநிலம் முழுவதும் 94.5 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து பிளஸ் 1 வகுப்புகளுக்கான சேர்க்கை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொடங்கியது. பெற்றோருடன் செல்லும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து சேர்க்கை பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நடப்பாண்டும் அது தொடர்ந்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை பொறுத்தவரை, கணிதம் மற்றும் கணினி அறிவியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் அடங்கிய அறிவியல் பிரிவும், வணிகவியல், பொருளியல் அடங்கிய கலைப்பிரிவும் மட்டுமே பெரும்பாலான அரசு பள்ளிகளில் உள்ளன. இவற்றில் கலைப்பிரிவை தேர்ந்தெடுக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், ‘இன்ஜினியரிங் படிப்பு மீதான மோகம் குறைந்ததால், பிளஸ் 1 அறிவியல் பிரிவில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாகவே, கலைப்பிரிவில் சேர தான் மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
எளிதாக தேர்ச்சி பெறலாம், அதிக மதிப்பெண் பெற முடியும், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்தலாம், உயர்கல்வியில் பல பிரிவுகளில் சேரும் வாய்ப்பு போன்றவையே மாணவர்களில் பலர் கலைப்பிரிவை தேர்ந்தெடுக்க காரணம். மேலும், பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், அறிவியல் பிரிவில் படிப்பது கடினமாக இருக்கும் என மாணவர்கள் எண்ணுகின்றனர். மேல்நிலைப்பள்ளிகளில் கலைப்பிரிவில் உள்ள இடத்திற்கும் கூடுதலாக மாணவர்கள் வருவதால், அனைவருக்கும் சேர்க்கை வழங்க முடிவதில்லை. எனவே, மாணவர்கள் ஆர்வம் காட்டும் பள்ளிகளில் மட்டும் கூடுதல் வகுப்புகளை தொடங்கவும், ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து, பிளஸ் 1 வகுப்புகளில் சேர்க்கை நடந்து வருகிறது. மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மூலம் நேற்று வழங்கப்பட்டது.
நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் நடப்பாண்டு முதன்முறையாக, பிளஸ் 1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்தது. மார்ச் 7ம் தேதி தொடங்கிய தேர்வு, ஏப்ரல் 16ம் தேதி நிறைவடைந்தது. சேலம் மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ் 1 தேர்வை எழுதியுள்ளனர். இதே போல் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். போதுமான விழிப்புணர்வு இல்லாததால், அனைத்து தேர்வுகளிலும் அதிகளவில் மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். இதனிடையே தேர்வு முடிவுகள் நாளை (30ம் தேதி) வெளியிடப்படவுள்ளது. முதன்முறையாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டுள்ளதால், பெற்றோர்களும், மாணவர்களும் தேர்வு முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.