பி.இ. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு: ஜூன் 2 வரை கால அவகாசம் நீட்டிப்பு



மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பி.இ. ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசத்தை ஜூன் 2ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் 100 நாள்களுக்கும் மேலாகப் போராடி வந்தனர். இதை தமிழக அரசும் மத்திய அரசும் கண்டுகொள்ளாததைத் தொடர்ந்து, கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை மக்கள் மேற்கொண்டனர்.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தனர். அதையும் மீறி போராடியவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானது. போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், போராட்டக்காரர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளக்கூடாது என்பதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இணையதள வசதியை அரசு முடக்கியுள்ளது.
இதன் காரணமாக அந்த மூன்று மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மூன்று மாவட்டங்களில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மே 25, 26, 28 தேதிகளில் நடைபெற இருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.
நீட்டிப்பு: அதே போன்று பி.இ. படிப்பில் சேர இருக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசத்தை மேலும் மூன்று நாள்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. இந்த கால அவகாசம் முன்னர் மே 30 ஆம் தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையதள வசதி இல்லாத காரணத்தால், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2018இல் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் ஜூன் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.