பிரிட்டிஷ் பேராசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி: அமைச்சர் தகவல்


வரும் கல்வி ஆண்டில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் 60 ஆயிரம் பேருக்கு ஆங்கிலம் பேச கற்றுத்தர திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.1.69 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகத் திறப்பு விழா, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ.45 லட்சம் செலவில் பார்வையாளர்கள் தங்கும் விடுதிக்கு அடிக்கல் நாட்டுவிழா, குமரன்கரடு பகுதியில் ரூ.8.75 லட்சம் செலவில் தார் சாலைக்கு பூமிபூஜை, தாண்டாம்பாளையத்தில் ரூ.35 லட்சம் செலவில் பள்ளிக் கட்டடம் கட்ட பூமிபூஜை மற்றும் மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வியத்தகு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
வரும் கல்வி ஆண்டில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 60 ஆயிரம் பேருக்கு ஆங்கிலம் பேச கற்றுத்தர திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் ரூ.500 கோடி செலவில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளியிலேயே இணையதள சேவை தொடங்கப்பட உள்ளது. தனியார் பள்ளிகளை விட கற்றலில் அரசுப் பள்ளி சிறந்து விளங்க பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.