இன்ஜி., கவுன்சிலிங் கட் ஆப் பட்டியல் மாவட்டம் வாரியாக விபரங்கள் வெளியீடு


அண்ணா பல்கலை நடத்தும், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களின் வசதிக்காக, இன்ஜி., கல்லுாரிகளின் சென்ற ஆண்டு, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான, மாணவர்கள் சேர்க்கைக்கு, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. ஒற்றைச் சாளர முறையில் நடந்து வந்த கவுன்சிலிங், இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மே, 3ல் துவங்கியது. அடுத்த மாதம், 2ம் தேதி வரை, விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக, கூடுதல் தகவல்களை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்ச்சி விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின்,https://www.annauniv.eduஎன்ற, இணையதளத்தில், இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதே போல, இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, கட் - ஆப் மதிப்பெண் பட்டியல், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கமிட்டியின்,https://tnea.ac.inஎன்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, சென்ற ஆண்டு இன்ஜினியரிங் சேர்க்கையில், மாணவர்கள் ஒவ்வொரு கல்லுாரியிலும் சேர்ந்த, கட் - ஆப் மதிப்பெண், பாடவாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.இதில், முன்பைவிட மிகவும் தெளிவாக, கல்லுாரி, கல்லுாரியின் கவுன்சிலிங் குறியீட்டு எண், பாடப்பிரிவு மற்றும் மாவட்ட வாரியான கல்லுாரிகள் என, தனித்தனியாக பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதை மாணவர்களும், பெற்றோரும் பார்த்து, தாங்கள் விரும்பும் கல்லுாரி, பாடப்பிரிவு மற்றும் கட் - ஆப் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்