தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாணவர், மாணவிகளின் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பணி மூப்பு ஆசிரியர், ஆசிரியைகளை பொறுப்பாசிரியர்களாக நியமிக்க வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பிரச்னைகளை கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் மாநில அளவில் குழு அமைத்து செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதன்படி, பள்ளிக் கல்வி இயக்குநரை தலைவராகவும், நாட்டு நலப்பணித் திட்ட இணை இயக்குநரை உறுப்பினர்-செயலராகவும், முதன்மைக் கல்வி அலுவலர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு மாநில அளவிலான குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உளவியல் மருத்துவர்கள், கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
உளவியல் பொறுப்பாசிரியர்: ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்னைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. இன்றைய சூழலில் பள்ளி மாணவர்கள் சிலர் தேர்வு பயம், வளர் இளம் பருவ பிரச்னைகள், மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளால் எளிதில் பாதிக்கப்பட்டு எதிர்மறையான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மாணவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் பணிமூப்பு மற்றும் தகுதி, திறமை வாய்ந்த ஓர் ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர் உளவியல் ஆலோசனை வழங்க பொறுப்பாசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். ஆண் ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், பெண் ஆசிரியர்கள் மாணவிகளுக்கும் தேவையின் அடிப்படையில் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். இந்த பொறுப்பாசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது சார்ந்த பயிற்சிகளை வழங்க வேண்டும்.
அனைத்து வகை பள்ளிகளிலும்...: இந்த உளவியல் பொறுப்பாசிரியர்கள் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் நியமிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கென பள்ளிகளில் தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.