பத்தாம் வகுப்பு: இன்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்



பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு திங்கள்கிழமையன்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தத் தேர்வை பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதினர். இதையடுத்து பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டன. பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணில் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொண்டனர்.


மதிப்பெண் சான்றிதழ்: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் திங்கள்கிழமை பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜூன் 28-இல் துணைத் தேர்வு: கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து தேர்ச்சி பெறாதவர்களுக்கும், தேர்வுக்கு வருகை புரியாதவர்களுக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28 முதல் நடைபெறவுள்ளது.


இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

பள்ளிகள் பதிவிறக்கம் செய்ய click here