அரசுப் பள்ளிகள் காப்பாற்றப்படுமா? அதிரடி அறிவிப்புகள்... அச்சத்தில் மாணவர்கள்...




ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வித்திடுவது அந்நாட்டின் கல்வியறிவுதான். ஆனால், சாமான்ய மக்களுக்கும் கல்வியறிவு தரும் அரசுப் பள்ளிகள் மீது அரசாங்கம் முறையான கவனம் செலுத்தாததால் இன்றைக்கு நம் கல்வியின் தரம் கேலிக்குரியதாகவே உள்ளது. அதனால், தரமான கல்வியறிவு கொடுப்பதாக காட்டிக்கொள்ளும் தனியார் பள்ளிகள் பெருகிய வண்ணம் உள்ளன.

பொதுவாகத் தமிழ்நாட்டில் வழக்குகள் அதிகமாக இருப்பது கல்வித்துறையில்தான் என்று சொல்லலாம். இதற்கிடையில் கல்வித்துறையில் தொடர்ந்துவரும் அதிரடி அறிவிப்புகள் வேறு மாணவர்களையும் பெற்றோர்களையும் கவலையடையச் செய்கின்றன. அப்படி ஓர் அறிவிப்புதான் மாணவர்கள் குறைவாக உள்ள வகுப்பறைகளை மூடச்சொல்லி பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிகழ்வு.

இதுகுறித்து கல்வியாளர் முனைவர் முருகையனிடம் கேட்டபோது, அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட கருத்துகளைப் பார்ப்போம்.‘‘பள்ளியில் ஒரு வகுப்பறை தொடங்கினால் சிறையில் ஓர் அறையை மூடிவிடலாம் என்றார் ஒரு கல்வியாளர்.

இவையனைத்தும் உணரப்பட்டதால்தான் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப் பள்ளி, மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு நடுநிலைப் பள்ளி, ஐந்து கிலோ மீட்டருக்கு ஓர் உயர்நிலைப் பள்ளி எனத் தொடங்கினார் கல்விக்கண் திறந்த காமராசர். நிதி ஆதாரத்தைக் காரணங்காட்டி மதிய உணவுத்திட்டம் வேண்டாமென உயர் அலுவலர்கள் அடம்பிடித்தும், இத்திட்டத்தால் அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் சேருவார்கள் எனின் பிச்சை எடுக்கக்கூட தயார் எனக் கூறினார் அந்த மாமனிதர்.

இவ்வாறான வரலாற்றுக்குச் சொந்தமான தமிழகத்தில்தான் சென்ற வாரம் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலமொழிப் பிரிவுகளில் 15 மாணவர்கள், மேனிலை வகுப்புகளில் நகராட்சி மாநகராட்சிப் பகுதிகளில் 30 மாணவர்கள், கிராமப் பகுதிகளில் 15 மாணவர்கள் எண்ணிக்கைக்குக் குறைவாக உள்ள வகுப்புகளை மூடிவிட்டு, இவர்களை அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்கவும் அறிவுறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள செய்திகளை மறுத்து கல்வியமைச்சர் அறிக்கை வெளியிட்டார். அதுவும் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு கருத்துகள் வெளியான பிறகு இவ்வறிக்கை தரப்பட்டது.

சரியாக இயங்காத, போதுமான வசதிகளும் மாணவர்களும் இல்லாத அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு மாணவர்களைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம். அரசு உதவியுடன் தனியார் பள்ளிகளில் இம்மாணவர் படிக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகச் செய்தி 29.08.2017 அன்று வெளியானது. மத்திய அரசும் நிதி ஆயோக் பரிந்துரைகளை ஒவ்வொன்றாக ஏற்றுச் செயல்படுவதாகத் தெரிவதிலிருந்து இப்பரிந்துரையும் நடைமுறைக்கு வரப்போவதாகவே நம்ப வேண்டியுள்ளது.

மத்திய அரசுக் கொள்கையோடு துளியளவும் மாறுபட மனமில்லாத தமிழ்நாடு அரசுக் கல்வித்துறை இவ்வாறான ஓர் அறிவிப்பை வெளியிட்டதில் வியப்போ அதிர்ச்சியோ கொள்ளத் தேவையில்லை’’ என்கிறார் முருகையன்.

இதுதவிர கல்வித்துறையில் உள்ள மேலும் சில சிக்கல்களையும் விவரித்தபோது, ‘‘ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்குப் பணி நியமனம் வழங்குவதில் பல்வேறு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, தேவையான ஆசிரியர்களைப் பள்ளிகளுக்கு நியமிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுவருகிறது.

இதுகுறித்துத் தெளிவான முடிவு ஒன்றை அரசு இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை. என்னதான் முற்போக்கான பாடத்திட்டம், பாடப்புத்தகங்கள் வரப்போகிறது என்று அறிவித்தாலும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தி, போதுமான ஆசிரியர்களை நியமிக்காவிட்டால் மாணவர் சேர்க்கை குறையத்தான் செய்யும். இக்குறைகளைக் களையாமல் மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதுபோலப் பள்ளிகளை மூட அச்சாரமாக வகுப்புகளை மூட உத்தரவிடுவது ஏற்புடையதல்ல’’ என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

‘‘தமிழ்நாட்டில் 53,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமே தவிர நிதிச் சுமையைக் காரணங்காட்டி குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவது என்பது நல்லதல்ல. 2010-14 ஆண்டுகளில் நாட்டில் அரசுப் பள்ளிகளில் 1.13 கோடிக்கு மாணவர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும், தனியார் பள்ளிகளில் 1.85 கோடிக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

சென்னைப் பெருநகரில் அரசு உதவி பெறும் ஒரு பள்ளியில் முதுகலை, இடைநிலை, தொழில், உடற்கல்வி என முறையே 4, 10, 10, 3 ஆக 27 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான சம்பளமாக மாதந்தோறும் அரசு இருபத்தியோரு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் ரூபாய் அளிக்கிறது.

பயிலும் மாணவர்களோ 450 பேர் மட்டுமே. கணக்கிட்டுப் பார்த்தால் மாதமொன்றுக்கு ஒரு மாணவனுக்கு 4,737 ரூபாய் நாம் கொடுக்கும் வரிப்பணத்திலிருந்தே அரசு செலவழிக்கிறது’’ என்று ஒரு புள்ளிவிவரத்தை எடுத்து வைக்கிறார் முருகையன்.

மேலும் அவர் சில குற்றச்சாட்டுகளைப் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாட்டின்மீது வைக்கலானார். ‘‘இலவசமாகத் தரப்படும் எழுதுபொருள், புத்தகம், புத்தகப்பை, லேப்டாப், சைக்கிள், சீருடை, செருப்பு எல்லாவற்றுக்கும் மேலாக சத்துணவுச் செலவு எல்லாம் இதில் சேர்க்கப்படவில்லை.

எனவே, சுமார் ரூ.5,000 மாதந்தோறும் ஒரு மாணவனுக்கு செலவழித்தும் ஏன் மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளியிடம் தோற்றுப்போகிறோம் என்பது சிந்திக்க வேண்டிய கருத்தாகும். தமிழ்நாட்டில் ஆங்கிலமொழிக் கல்வியை முதல் வகுப்பிலிருந்தே தொடங்கினால் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கூடும் என்ற கணிப்பும் தவறாகிவிட்டது.

மாணவர் - ஆசிரியர் எண்ணிக்கை விகிதம். 30:1 என்றபோதும் பல பள்ளிகளில் ஆசிரியருக்கேற்ற மாணவர் எண்ணிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், பல தனியார் பள்ளிகளில் நிதி உதவி பெறும் வகுப்புகளைத் தவிர்த்து சுயநிதிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, இவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களைப் பெற்றோர் ஆசிரியர்க் கழகம் மூலமாகவோ நிர்வாகமோ நியமித்து, சம்பளத்துக்காக மாணவரிடம் பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்பதும் மாணவர் எண்ணிக்கை குறைவுக்கு ஒரு காரணம் எனலாம்.

இயக்குநரின் சுற்றறிக்கையில் மேனிலை ஆசிரியர்கள் வாரமொன்றுக்கு 28 பாடவேளைகள் எடுக்கவும், பாடவேளை குறைவாக உள்ள ஆசிரியர்கள் கீழ் வகுப்புகளுக்கும் பாடம் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், இம்முதுகலை ஆசிரியர்கள் 6-8 வகுப்புகளுக்குப் பாடம் எடுப்பதைக் கவுரவக் குறைவாக எண்ணி மறுக்கின்றனர் என்பதே உண்மை.

மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் குறைவாக உள்ளனர் என்று வகுப்பை மூடுவதில்லை. ஒரு பள்ளி ஆசிரியர் பாடவேளை குறையும்போது இப்பள்ளியில் பணியாற்றிக்கொண்டே அடுத்த பள்ளிக்குச் சென்றும் பணியாற்றுவார். இந்நடைமுறையை அனைத்து நிர்வாகப் பள்ளிகளுக்கும் கொண்டு செல்லலாம்.

மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது ஆசிரியர்பணி பரவலாக்கப்பட வேண்டும் என்பது கூடவா நம் கல்வி அலுவலர்களுக்குத் தெரியவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது’’ என்று அடுக்கடுக்காக பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடின்மையை சாடுகிறார் முருகையன்.

- தோ.திருத்துவராஜ் நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி