கலைக் கல்லூரிகளாக மாறும் பொறியியல் கல்லூரிகள்... இனி என்ன ஆகும்? - நன்றி விகடன்


பொறியியல் சேர்க்கை குறைந்துவரும் நிலையில், பொறியியல் கல்லூரிகள் பார்மசி கல்லூரிகளாகவும், அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளாகவும் மாறிவருகின்றன. இந்த ஆண்டு 15 பார்மசி கல்லூரிகள் புதிதாகத் திறக்க அனுமதி வேண்டி விண்ணப்பித்திருக்கின்றன. ஏற்கெனவே செயல்பட்டுவரும் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 12 கல்லூரிகள் மூட விருப்பம் தெரிவித்திருக்கின்றன.

இன்ஜினீயரிங் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த நான்கு ஆண்டுகளாகக் குறைந்துவருகிறது. இரண்டு லட்சம் பேர் சேர வாய்ப்புள்ள கலந்தாய்வில் ஒரு லட்சம் மாணவர்களே சேர்ந்திருக்கின்றனர். இந்நிலையில், ஒருசில கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் சேர்ந்திருப்பதால், சரியான வருமானம் இல்லாததால் கல்லூரிகளை மூடவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இவை சி.பி.எஸ்.இ பள்ளிகளாகவும், பார்மசி மற்றும் கலைக் கல்லூரிகளாகவும் மாற அனுமதி கோரியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் விதிமுறைப்படி, 2017-ம் ஆண்டு வரை நகரங்களில் கல்லூரி தொடங்க 2.5 ஏக்கர், கிராமப் பகுதிகளில் தொடங்க 7.5 ஏக்கர் இடம் இருந்தால் போதும். புதிதாக வெளியிட்டுள்ள விதிமுறையின்படி, புதிய கல்லூரி தொடங்க மாநகரங்களில் கட்டுமான இடம் இருந்தால் போதும். மேலும், ஏற்கெனவே செயல்பட்டுவரும் கல்லூரிகளில் காலி இடம் இருந்தால் அந்த இடத்தைப் பயன்படுத்தியும் புதிய கல்லூரிகள் தொடங்கலாம் என்று விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதைப் பயன்படுத்தி பொறியியல் கல்லூரிகள், ஏற்கெனவே காலியாக உள்ள இடத்தில் பார்மசி கல்லூரி தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.

அகில இந்திய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் புதிதாகத் தொடங்க அனுமதி கேட்டுள்ள 30 கல்லூரிகளில், பதினைந்து பார்மசி கல்லூரிகள், இரண்டு கட்டடவியல் (ஆர்க்கிடெக்சர்) கல்லூரிகள். மற்றவற்றில் நான்கு கல்லூரிகளில் எம்.பி.ஏ படிப்பையும், நான்கு கல்லூரிகளில் எம்.சி.ஏ படிப்பையும், இரண்டு கல்லூரிகளில் முதுநிலை மேலாண்மைப் பட்டயப்படிப்பையும், மூன்று பாலிடெக்னிக் கல்லூரிகளும் தொடங்க விண்ணப்பித்திருக்கின்றன. ஏற்கெனவே உள்ள மூன்று பொறியியல் கல்லூரிகளை பார்மசி கல்லூரிகளாக மாற்றிக்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புதிதாக 65 கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்திருப்பதாகத் தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. புதிதாக அனுமதி கேட்டுள்ளதில், பத்து பொறியியல் கல்லூரிகள் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளாக மாற்றிக்கொள்ள விண்ணப்பித்திருக்கின்றன.

`தமிழ்நாட்டில் தற்போது 51 பார்மசி கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில் புதிதாக 15 கல்லூரிகள் வரும்போது, பார்மசி துறையில் வேலைவாய்ப்பு குறையவே வாய்ப்புள்ளது. பொறியியல் கல்லூரிகள் பார்மசி கல்லூரிகளாக மாறுவதைத் தடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு உள்ள பிரிவுகளில் மட்டும் புதிய கல்லூரிகளைத் தொடங்க அனுமதி வேண்டும்' என பார்மசி கல்லூரிகளின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு, அகில இந்திய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் உள்ள 12 பொறியியல் கல்லூரிகளும், எம்.சி.ஏ படிப்பை போதிக்கும் ஏழு கல்லூரிகளும், எம்.பி.ஏ படிப்பைப் புகட்டிவரும் மூன்று கல்லூரிகளும், ஆறு பாலிடெக்னிக் கல்லூரிகளும் மூட விண்ணப்பித்திருக்கின்றன. - நன்றி விகடன்