சித்தா, ஆயுர்வேத படிப்புக்கு நீட் தேர்விலிருந்து விலக்குக்கோரி தமிழகத்திலிருந்து கோரிக்கை வரவில்லை


சென்னை: ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழக அரசு அதிகாரிகள் திறம்பட செயல்படாத காரணத்தால், ஆயுஷ் மருத்துவம் படிக்க திட்டமிட்டிருந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசின் ஆர்வமில்லாமையே காரணம் என கூறப்படுகிறது.

 தமிழகத்தில் ஆயுஷ் மருத்துவப்படிப்புகளுக்கு 6 அரசு மருத்துவ கல்லூரிகளில் 560 இடங்களிலும் 20 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு கடந்த ஆண்டு வரை பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடந்து வந்தது.

இந்நிலையில் சில மாதங்களுக்குமுன், இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது.

தமிழக அரசு சார்பில் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர், தமிழகத்தில் உள்ள ஆயுஷ் மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்றும் அதனால், நீட் ேதர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால் ஆயுஷ் அமைச்சகம் சார்பில், இதுவரை அந்த கடிதத்துக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

 மத்திய அரசுத்தரப்பில் உங்கள் கடிதத்தை ஏற்றோ மறுத்தோ பதிலளிக்கப்படாத நிலையில், இந்த ஆண்டு எவ்வாறு கலந்தாய்வு நடத்தப்போகிறீர்கள் என்று இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்க மூத்த அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டபோது அவர் கூறிகையில், ‘‘மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் உத்தரவுப்படி நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலோ அல்லது பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலோ மாணவர் சேர்க்கை நடத்தப்படும்’’ என்றார்.

 இதே நேரத்தில் தமிழகம் வந்திருந்த மத்திய அமைச்சர் ஒருவர், தமிழகம் உள்பட எந்த மாநிலமும் ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கவில்லை என்று தெரிவித்திருந்தார். அது தமிழக மாணவர்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த தகவல் கிடைத்தும் ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு அழுத்தம் தரவில்லை.

 தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட ஆங்கில மருத்துவ படிப்புகளுக்கு நீட் வேண்டாம் என்றும் போராடினார்களே தவிர, ஆயுஷ் மருத்துவ படிப்புகள் தொடர்பாக எந்த வித போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.

இதனால் மத்திய அரசு ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது.

 இந்நிலையில் தனியார் ஆயுஷ் மருத்துவ கல்லூரி ஒன்றில், மாணவர் சேர்க்கை தொடர்பாக விசாரித்தபோது, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், 2.5 லட்சத்தை தற்போது முன்பணமாக கட்டுங்கள் என்றனர்

நீட் தேர்வு முடிவு வந்தபின் நீங்கள் மாணவர் சேர்க்கைக்காக வந்தால், இடம் காலியாக இருந்தால் மட்டுமே சேர்த்துக்கொள்வோம் என்று தெரிவித்தனர்.

 அதனால் அரசு ஒதுக்கீட்டின்கீழ் குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் ஆயுஷ் மருத்துவம் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயுஷ் மருத்துவம் படிக்க நினைத்திருந்த மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்துள்ளது.