TNTET சைக்காலஜியில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா?


குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்
கற்றலில் தனியாள் வேறுபாடு என்பது தவிர்க்க முடியாதது போல் கல்வி உளவியல் பாடமும் சற்று வேறுபாடு உடையதுதான். எனவே, உளவியல் தத்துவங்கள், கோட்பாடுகள், சோதனைகள் ஆகியவற்றை ஆழ்ந்த புரிதலோடு பயின்று அதற்கான குறிப்புகளை நீங்களே தயார் செய்வது நலம். அவற்றுள் முதன்மைப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகள் என வகைப்படுத்தி பின்னர் அவற்றுள் அடங்கும் வரையறைகள், நுணுக்கங்கள், உளவியலாளர் பெயர்கள், அவர்கள் சார்ந்த கோட்பாடுகள் மற்றும் சோதனைகள் ஆகியவற்றை அட்டவணைப்படுத்துதல் அவசியம்.
உளவியல் நூல்கள் மற்றும் நூலாசிரியர்களின் பட்டியல் தயாரித்து அடிக்கடி அவற்றை மீள்பார்வை செய்தல் வேண்டும்.
உளவியல் கோட்பாடுகள் வெவ்வேறு படிநிலைகளாக தரப்படுத்தி வரிசைப்படுத்தப்பட்டு விளக்கப்பட்டுள்ளதால் அத்தகைய படிநிலைகளின் எண்ணிக்கை அவற்றின் வரிசை போன்றவற்றை தனித்தனியாகக் குறித்து வைத்து மனத்தில் இருத்தல் வேண்டும்.
கோட்பாடுகள், சோதனைகள், இவற்றைப்பயிலும்போது ஒற்றுமை - வேற்றுமை அடிப்படையில் நீங்களே ஆராய்ந்து எளிதாக நினைவுகூர முயல வேண்டும். ஓர் உளவியல் அறிஞர் மற்றவர்களிடமிருந்து எந்த வகையில் வேறுபடுகிறார் என்றும் அவர்களின் கோட்பாட்டின் அடிப்படை வேறுபாடு மற்றும் அதற்கான எடுத்துக்காட்டுகளை குறித்து வைத்துப் படித்தல் வேண்டும்.
நினைவு சூத்திரங்கள், சுருக்கக் குறிப்புகள் மற்றும் அவற்றின் விரிவாக்கம் (SQ3R, ABL, ZPD, LAD போன்றவை), நுண்ணறிவு ஈவு, அடைவு ஈவு, மனத்திருத்தல்கெழு போன்ற வாப்பாடுகள்; அவை தொடர்பான கணக்கீடுகளை செய்து பார்க்கவேண்டும்.
தாள் ஒன்றைப் பொருத்தவரை D.T.Ed. பாடத்திட்டத்திட்டத்தின் கருத்துக்களை அந்தந்த கற்பித்தல் முறைகளோடு இணைத்துக் கற்றல் நல்லது. கோத்தாரி குழு, யுனெஸ்கோவின் டெலார்ஸ் அறிக்கை, தேசிய கல்விக் கொள்கை, இந்திய அரசியலமைப்பின் கல்வி சார் கொள்கைகள், திருத்தங்கள், தேசிய கலைத்திட்டம் 2005 ஆகியவற்றின் கல்விப் பிரகடனங்களைத் தனித்தனியாக குறிப்பிட்ட வேறுபாடுகளை உணர்ந்து கற்க வேண்டும்.
தாள் இரண்டைப் பொருத்தவரை தமிழகத்தின் அனைத்து பல்கலைக் கழகங்களின் பி.எட். பாடத்திட்டம் தொடர்பான பாடக்குறிப்புகள் கையேடுகள் இவற்றை ஒப்பிட்டு புதிய பெயர்கள் மற்றும் வேறுபட்ட சொற்றொடர்கள் போன்றவற்றைக் கண்டறிந்து கற்றல் நலம்.
உங்களது கடின உழைப்பை முலதனமாக்கி ஆக்கத் திறனை முன்வைத்து நுண்ணறிவை கேடயமாக்கி மன எழுச்சிகளைத் தவிர்த்து நினைவை மேம்படுத்தினால் வெற்றி நிச்சயம்."