1, 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது: வருகிறது சட்ட மசோதா


பள்ளிகளில் 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்ட மசோதா கொண்டுவரப்படவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

பள்ளி செல்லும் குழந்தைகளின் புத்தகச் சுமையை குறைக்கவும், 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்காமல் இருக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே 30-ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், ஜாவடேகர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தபோது அவர் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன். அந்த உத்தரவை ஆய்வு செய்து வருகிறோம்; தேவையான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்வோம். 1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டுவர உள்ளோம்.

குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்விச் சட்டம் 2009-க்கு இணங்கியதாக இருக்கும் இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தடையின்றி நிறைவேறும் என்று நம்புகிறோம். குழந்தைகள் குதூகலத்துடன் கல்வி பயில வேண்டும் என்பதே நமது விருப்பம். கல்வி கற்பதில் அவர்களுக்கு எந்த நெருக்கடியும் அளிக்கப்படக் கூடாது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி, குழந்தைகளுக்கான நெருக்கடியை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். ஒரு பள்ளிக் குழந்தையின் புத்தகச் சுமையானது, அந்தக் குழந்தையின் எடையில் 10 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கடந்த மாதம் 30-ஆம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது