பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில் மொத்தம் 1.52 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சனிக்கிழமை இரவு வரை விண்ணப்பிக்கலாம் என்பதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டைவிட கூடுதலாகும். கடந்த 2017-இல் 1,40,633 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.
ஜூன் 8-ஆம் தேதி முதல்...விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு உதவி மையங்களில் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு முதன் முறையாக கலந்தாய்வு ஆன்-லைனில் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் சென்னைக்கு வராமல், அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
1.52 லட்சம் பேர் விண்ணப்பப் பதிவு: பி.இ. படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு மே 3-ஆம் தேதி தொடங்கியது. பதிவு செய்வதற்கான கால அவகாசம் சனிக்கிழமை முடிவடைந்த நிலையில், அன்றைய தினம் மாலை 6 மணி வரை 1,52,940 மாணவர்கள் விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 2017-18 கல்வியாண்டில் பி.இ. படிப்பில் சேர 1,40,844 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.
நாளை முதல்...அது மட்டுமின்றி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் திங்கள்கிழமை (ஜூன் 4) முதல் மாணவர்கள் லாகின் செய்து இந்த விவரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
சம வாய்ப்பு எண், தரவரிசைப் பட்டியல் எப்போது? பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான சம வாய்ப்பு எண் ஜூன் 5 அல்லது ஜூன் 6-ஆம் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம வாய்ப்பு எண் எதற்கு? பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெறும்போது, அவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கேள்வி எழும்.
அப்போது கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கணித மதிப்பெண் ஒரே மாதிரியாக இருந்தால் இயற்பியல் பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும். அதுவும் சமமாக இருக்குமானால், பிளஸ் 2 நான்காவது பாட மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படும்.
இந்த மதிப்பெண்கள் அனைத்தும் சமமாக இருக்குமானால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். பிறந்த தேதியும் சமமாக இருக்கும்போது, சம வாய்ப்பு எண் ("ரேண்டம் எண்') அடிப்படையில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.