ஜூன் 5 முதல் பி.இ விண்ணப்பங்கள் சரிபார்ப்பு: எஸ்.எம்.எஸ் மூலம் மாணவர்களுக்கு நாள், நேரம் அறிவிப்பு

ஜூன் 5 முதல் பி.இ விண்ணப்பங்கள் சரிபார்ப்பு: எஸ்.எம்.எஸ் மூலம் மாணவர்களுக்கு நாள், நேரம் அறிவிப்பு





பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் சான்றிதழ்கள் ஜூன் 5 முதல் ஜூன் 14 வரை சரிபார்க்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 562 பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கையை, கவுன்சலிங் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நிரப்பி வருகிறது. மொத்தம் உள்ள 2.6 லட்சம் பொறியியல் காலி இடங்களில் 1.9 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. இந்த வருடம் முதல், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதனால் ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும். கவுன்சலிங்குக்கான கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்ற அறிவிப்பால் கிராமப்புற மாணவர்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருவதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக வழக்குகள் பதியப்பட்டாலும் தேவையான உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் சான்றிதழ்கள் வரும் ஜூன் 5 முதல் 14 வரை சரிபார்க்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், இதற்காக 42 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாள், நேரம் குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருகிறது. 2 லட்சம் காலி இடங்களுக்கு இந்த ஆண்டு 1.5 லட்சம் மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர் என்பது மாணவர்கள் மத்தியில் பொறியியல் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
Designed by OddThemes | Distributed by Gooyaabi