10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத பஸ் வசதி: தேர்வு மையங்களும் 4 மடங்காக அதிகரிப்பு

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செல்லும் மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; சமூக இடைவெளிக்காக தேர்வு மையங்களும் நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி துவங்கி 25 வரை நடக்கிறது. கடலுார் மாவட்டத்தில் தேர்வு நடத்துவதற்காக கல்வித்துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது.இந்நிலையில், தேர்வு எழுதும் மையங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, போக்குவரத்து வசதிகள் செய்வது உள்ளிட்டவைகள் குறித்து கல்வித்துறை, உள்ளாட்சித்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் அன்புச்செல்வன் நேற்று ஆலோசனை நடத்தினார். டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, சப் கலெக்டர்கள் பிரவின் குமார், விசுமகாஜன், ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஜ் நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்ட முடிவில் கலெக்டர் அன்புச்செல்வன் கூறியது: கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வை 35,546 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர். அதில், ஆண்கள் 18,341, பெண்கள் 17,205 ஆகும். கொரேனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கில் தேர்வெழுதும் மாணவ மாணவியரின் வசதிக்காக 143 தேர்வு மையங்கள், 443 மையங்களாக அதிகரிக்கப்பட் டுள்ளது.தேர்வு மையங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். தேர்வு நடைபெறும் பள்ளி வகுப்பறைகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் கிருமி நாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்தப்படும். மாணவ மாணவியர்கள் தங்கள் தேர்வெழுதும் பள்ளிக்கு செல்ல வசதியாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பணி டி.ஆர்.ஓ., தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்படும்.தேர்வெழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மூன்று முகக்கவசங்கள் வழங்கவும், அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினிகள் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அச்ச மின்றி தேர்வெழுத அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளது என, தெரிவித்தார்.

0 Response to "10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத பஸ் வசதி: தேர்வு மையங்களும் 4 மடங்காக அதிகரிப்பு"

Post a Comment