பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு- மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சம்!


தமிழகத்தில் கரோனா வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து சென்னை, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைத் தனிமைப்படுத்தி வைத்து கண்காணிக்க கல்லூரிகள், பள்ளிகளை அரசாங்கம் முறைப்படி பெற்றுள்ளது.
அப்படிப் பெறப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் அறைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உட்பட சில மாவட்டங்களில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள். அவர்களது குடும்பத்தார், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் இங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜூன் 15- ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும் எனக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதான் பெற்றோர்களை அச்சப்பட வைத்துள்ளது.
இதுப்பற்றி மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், பள்ளிகளில் உள்ள அறைகளில் தான் அறைக்கு 5 பேர், 10 பேர் என கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தாரை தங்கவைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படித் தங்க வைக்கப்பட்டுள்ள பலருக்கும் கரோனா எனத் தெரியவந்து. அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்படிப்பட்ட அறைகளில் தான் இன்னும் 20 நாளில் எங்கள் பிள்ளைகள் போய் தேர்வு எழுதவுள்ளார்கள். அந்த அறைகளில் தேர்வு எழுத எந்த தைரியத்தில் பிள்ளைகளை அனுப்புவது எனக் கேள்வி எழுப்புகிறவர்கள்.
பள்ளிகளில் உள்ளவர்களைக் கல்லூரிகளுக்கு மாற்றிவிட்டு பள்ளியின் வகுப்பறைகளைத் தேர்வுக்கு முன்பாக கிருமிநாசினி தெளித்து, சில நாட்களுக்கு அந்த அறைகளை யாரும் உபயோகப்படுத்தாதபடி செய்தாலாவது நன்றாகயிருக்கும், இதை அரசாங்கம் உடனடியாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் பிள்ளைகளைத் தேர்வுக்கு அனுப்பும் போது கொஞ்சம் பயமில்லாமல் இருக்க முடியும். இதனை உடனடியாக கல்வித்துறை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

0 Response to "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு- மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சம்!"

Post a Comment