உடலுக்கு உரமாகும் 'உடைத்த கடலை'


பருப்பு வகைகளில் உடைத்த கடலைக்கு தனி இடம் உண்டு. இதை பொட்டுக் கடலை என்றும் வறுத்த கடலை என்றும் சொல்வார்கள். பொட்டுக்கடலையை தேங்காயுடன் சேர்த்து சட்னியாக சாப்பிடுவது வழக்கத்தில் இருக்கிறது. உடைத்த கடலையின் ஊட்டச்சத்து கலவை காரணமாக பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன. இது லைசின் நிறைந்த சைவ புரதத்தின் மூலமாக இருப்பதால், புரத ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதில், இது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 100 கிராம் உடைத்த கடலையில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள்

ஆற்றல் - 369 கலோரி
கார்போஹைட்ரேட் - 58 கிராம்
புரோட்டீன் - 23 கிராம்
கொழுப்பு - 5.2 கிராம்
இரும்பு - 9.5 கிராம்
நார்ச்சத்து - 1 கிராம்
பாஸ்பரஸ் - 340 மிலிகிராம்
பீட்டா கரோட்டின் - 113 மைக்ரோகிராம்
வைட்டமின் ‘ஏ’ - 18.83 மைக்ரோகிராம்
கால்சியம் - 58 மிலிகிராம்
பெரு ஊட்டச்சத்துக்கள் (Macro Nutrients)

பெரு ஊட்டச்சத்துக்களாக 58 சதவீதம் கார்போஹைட்ரேட்டும், புரோட்டீன் 23 சதவீதமும் உடைத்த கடலையில் இருக்கிறது. நுண்ணூட்டச்சத்துக்கள் (Micro Nutrients) இரும்புச்சத்து. ‘வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் இரும்புச்சத்து குறைபாடு அதிகமாக காணப்படுகிறது, இதற்கு காரணம் போதிய சத்துணவு உட்கொள்ளாமை காரணமாக இருக்கலாம்’ என்று சொல்லப்படுகிறது. பெங்கால் கிராமில் 9.5 மிலிகிராம் இரும்புச்சத்து இருப்பது இரும்புச்சத்துக்கான நல்ல ஆதாரமாகும். இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவதால், இரும்புச்சத்து பற்றாக்குறை உள்ளவர்களிடத்தில் ரத்த சோகை அபாயத்தை குறைக்கிறது.

வைட்டமின் B9

பொதுவாகவே பருப்பு வகைகள் ஃபோலேட்டுகள் நிறைந்திருப்பவை. அதிலும், பெங்கால் கிராமில் 139 மைக்ரோ கிராம் வைட்டமின் பி 9 மிகுந்துள்ளது. உடலின் தசைகள், நரம்புகள் வலுப்பெற உதவுகிறது. பி 9 வைட்டமின் புதிதாக ரத்த சிவப்பு அணுக்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் ரத்த சோகையைத் தடுக்கிறது.

பாஸ்பரஸ்

உடைத்த கடலை, சுமார் 340 மிலிகிராம் பாஸ்பரஸைக் கொண்டுள்ளது. அதாவது பரிந்துரைக்கப்பட்ட அளவில் 30 சதவீதம் பாஸ்பரஸ் இதில் இருக்கிறது. இதனால் வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க உதவுகிறது.

கால்சியம்

உடைத்த கடலை எலும்பு ஆரோக்கியத்திற்கான கால்சியத்தின் நல்ல உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. உடைத்த கடலையில் இருக்கும் கால்சியத்தின் அளவு எலும்பை உறுதியாக்கவும், முதியவர்களுக்கு வரக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் குறைவால் எலும்புகள் பலமிழக்கத் தொடங்கும். கால்சியம் நிறைந்த உடைத்த கடலையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், பெண்கள் இழந்த தங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும்.

மருத்துவப் பயன்கள்

ஆற்றல் ஊக்கி

உடைத்த கடலையின் மிகவும் முக்கியமான நன்மைகளில் ஒன்று மொத்த ஆற்றலை அதிகரிக்கும் திறன் ஆகும். உடைத்த கடலையில் உள்ள அபரிமிதமான புரத ஆதாரம், உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள அமினோ அமிலம் மெத்தியோனைன் (Amino Acid Methionine) உடல் செல்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, இது ஒட்டுமொத்த ஆற்றலை அதிகரிப்பதில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடல் சோர்வாக உணரும்போது, ஒரு கை உடைத்த கடலையை சாப்பிட்டாலே உடனடி ஆற்றல் கிடைத்துவிடும்.

ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது

உடைத்த கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் ரத்த ஓட்டத்தில் சர்க்கரை அளவு, இன்சுலின் அளவு மற்றும் லிப்பிட் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது

உடைத்த கடலை ரத்த அழுத்தத்தை சீராக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் ரத்தத்தில் சோடியத்தின் விளைவை சரிசெய்ய முடியும். இதன் மூலம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள சிறந்த உணவாக உடைத்த கடலையைச் சொல்லலாம்.

ஆரோக்கியமான இதயம்

இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் 4 உள்ளடக்கங்களில் ஃபைபர் ஒன்றாகும். இது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம், இதய நோய்க்கான ஆபத்தையும் குறைக்கிறது. ஒரு ஆய்வின்படி, ஒரு நாளைக்கு 4090 மி.கி பொட்டாசியம் உட்கொள்பவர்களுக்கு இதய நோயால் இறப்பதற்கான ஆபத்து 49 சதவீதம் குறைவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

பெண்களிடத்தில் ஹார்மோன் சமநிலைத்தன்மை

உடைத்த கடலையை பெண்களின் தோழி என்று சொல்லலாம். காரணம் இதில் இருக்கும் பைட்டோஈஸ்ட்ரோஜன் (Phytoestrogens) என்று சொல்லப்படும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் (Phytonutrients). இந்த பைட்டோநியூட்ரியன்ட்ஸ் மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. இது பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் ரத்த அளவை பராமரிக்க உதவுகிறது. பொட்டுக்கடலையில் இருக்கும் அதிக இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் , பெண்களின் மாதவிடாய் நாட்களில் ரத்தப்போக்கினால் ஏற்படும் ஹீமோகுளோபின் இழப்பை ஈடுகட்டுகிறது. அது தவிர, பெண்களின் கர்ப்பகாலத்திலும், பாலூட்டும் காலத்திலும் அதிக அளவு இரும்புச் சத்து அவசியம். அந்தக் காலங்களில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்க பொட்டுக் கடலையை இவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

உயர் கொலஸ்ட்ரால் மீதான விளைவு

கொழுப்பு அதிகமுள்ள உணவிற்குப் பதிலாக உடைத்த கடலையை ஸ்நாக்சாக எடுத்துக் கொள்ளும் போது, ஒரு நாள் முழுவதும் இரைப்பையிலிருந்து வெளியேறும் பித்த அமிலங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் கொழுப்பை குறைக்க முடியும். சிறந்த செரிமானத்திற்கு..உடைத்த கடலையில் இருக்கும் சபோனின்கள் (Saponins) எனப்படும் பைட்டோ கெமிக்கல்கள் (Phyto Chemicals) குடலில் உள்ள தேவையற்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதால், சுத்தமான குடலை பராமரிப்பதன் மூலம் செரிமானத்தின் செயல்பாட்டில் இந்த சபோனின்கள் சிறந்த பங்களிக்கின்றன.

எரிச்சல் கொண்ட குடல்நோய்க்குறி (Irritable Bowel syndrome)

நார்ச்சத்து மிகுந்த உடைத்த கடலையை எடுத்துக் கொள்ளும் IBS நோயாளிகளின் நோய் அறிகுறிகளை எளிதாக்குகிறது. தலைமுடி, சரும பராமரிப்பிற்கு…உடைத்த கடலை பருப்பில் மெலனின் மற்றும் கரோட்டின் புரதங்கள் உள்ளன. உடைத்த கடலை பருப்புகளை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு, வேர்கள் பலப்படுவதோடு, தலைமுடி உதிர்தலும் குறைகிறது. இளநரை பிரச்னையும் நீங்குகிறது. இதில் நிறைந்திருக்கும் புரதம் மற்றும் இதர நுண்ணூட்டச் சத்துக்கள் சருமத்தின் பளபளப்புத்தன்மையை அதிகப்படுத்துகிறது. சருமத்தில் வரக்கூடிய சொறி, சிரங்கு, படை பாதிப்புகள் விரைவில் சரியாக்கும். சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தையும் போக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்

பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருப்பதைப் போலவே உடைத்த கடலையிலும் செலினியம் மிகுந்துள்ளது. இந்த தாதுப்பொருள் ரத்தத்தில் புற்றுநோயை உண்டாக்கும் சேர்மங்களை அழிக்கிறது. புற்றுநோய் அழற்சி, கட்டி வளர்ச்சியை குறைக்க உதவுகிறது. இதனால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை குறைக்கிறது.


நன்றி: குங்குமம் தோழி

0 Response to "உடலுக்கு உரமாகும் 'உடைத்த கடலை'"

Post a Comment