100% தோல்வி: பள்ளி மீது நடவடிக்கை!



கிருஷ்ணகிரில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரு மாணவர்கூடத் தேர்ச்சி பெறாத பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு பொதுத் தேர்வில் 2 ,574 அரசுப் பள்ளிகளில், 238 அரசுப் பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்சசி பெற்று சாதனை படைத்தனர். இதற்கு மாறாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, மாசிநாயக்கனப்பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவர்கூடத் தேர்ச்சி பெறவில்லை.

தெலுங்கு மேல்நிலை பள்ளியான இப்பள்ளியில் இருந்து 29 பேர் தேர்வு எழுதியுள்ளனர். ஆனால் அவர்களில் ஒருவர் கூட தேர்ச்சியடையவில்லை. தெலுங்கு அளவில் அனைவரும் தேர்ச்சி அடைந்த நிலையில் ஆங்கில பாடத்தில் 19 மாணவர்களும், இயற்பியலில் 2 பேரும், வேதியியலில் 5 மாணவர்களும், கணினி அறிவியலில் 10 பேரும், உயிரியலில் 18 மாணவர்களில் 2 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். எனினும் கணிதப் பாடத்தில் யாரும் தேர்ச்சி பெறவில்லை

இது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது பள்ளியில் போதுமான ஆசிரியர் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக இதுபோன்ற நிலைதான் நீடிக்கிறது என்றும் மாற்று பள்ளி ஆசிரியர்களே இங்கு வந்து பாடம் நடத்துவதாகவும் கூறப்படுகிறது. .கடந்த ஆண்டும் இந்த பள்ளியில் வெறும் 33 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள், மாசிநாயக்கனப்பள்ளி பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி கூறியுள்ளார்.

“அப்பள்ளியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாதது வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நிரந்தர ஆசிரியர்கள் அல்லாமல் முதுகலை ஆசிரியர்கள் சிலரும் பணியில் உள்ளார்கள். எனினும் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை . அப்பள்ளி மீது நடவடிக்கை எடுத்து அடுத்த ஆண்டு முதல் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற முயற்சி எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் புக்கசாகரம் பள்ளி 86 சதவிகித தேர்ச்சியும், நல்லூர் பள்ளி 90 சதவிகித, மதகொண்டப் பள்ளி 63 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.