பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு: 104-இல் ஆலோசனை


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாவதைத் தொடர்ந்து 104 மருத்துவ சேவையில் மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 14417 என்ற தொலைபேசி சேவையிலும் ஆலோசனைகளைப் பெறலாம். 104 மற்றும் 14417 ஆகிய இரண்டு சேவைகளிலும் 24 மணி நேரமும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது: தேர்வு முடிவு வெளியாகும் சமயத்தில் மாணவர்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், மதிப்பெண் குறைவாகப் பெற்ற மாணவர்கள், பொதுத் தேர்வு தொடர்பான மனக்குழப்பங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும் பத்தாம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு அடுத்து என்ன பிரிவைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம் என்பது தொடர்பாக கல்வி ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படும். மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் ஆலோசனைகளைப் பெறலாம் என்று தெரிவித்தனர்.