நாளை பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு


தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வரும் புதன்கிழமை (மே30) வெளியிடப்படவுள்ளன. 

இதைத் தொடர்ந்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் பெற்றோரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் முதல் முறையாக பிளஸ்1 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 7-ஆம் தேதி முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வை 7 ஆயிரத்து 70 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள், 1,753 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் எழுதினர். குறிப்பாக மாணவர்களை விட கூடுதலாக 58,897 மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் கணிதம், வேதியியல், பொருளியல் உள்ளிட்ட சில பாடங்களில் வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருந்தனர். 

பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்கள் www.tnresult.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளைப் போன்றே பிளஸ் 1 வகுப்புக்கும் மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளின் பட்டியல் வெளியிடப்பட மாட்டாது. 

இந்தாண்டு முதல் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின்போது பாடவாரியாக 200-க்கு 200, 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. அதே முறையே பிளஸ் 1 வகுப்புக்கும் பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.