25 சதவீத இட ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் இன்று குலுக்கல் மூலம் மாணவர் சேர்க்கை


தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருக்கும் குழந்தைகளுக்கு திங்கள்கிழமை நடைபெறும் குலுக்கல் மூலம் சேர்க்கை வழங்கப்படவுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஏழை, நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது.

2018-2019-ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை இருப்பிடச் சான்று, வருமானச் சான்று உள்பட பல்வேறு ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க பெற்றோருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கு சேர்க்கைக்காக ஒரு லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து அந்த விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தன. அப்போது தகுதி இல்லாத, போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கைக்கு தகுதியுடைய குழந்தைகளின் பெயர்ப் பட்டியல் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்குச் சமமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் அதற்கான சேர்க்கை உடனடியாக வழங்கப்படும். மாறாக, பள்ளியில் உள்ள இடங்களைக் காட்டிலும் கூடுதலான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

உதாரணமாக ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. அல்லது முதல் வகுப்பில் மொத்தம் 100 இடங்கள் உள்ளன என வைத்துக் கொண்டால் அதில் 25 இடங்கள் இலவச சேர்க்கையின் கீழ் வரும். அந்தப் பள்ளியில் நுழைவு நிலை வகுப்பில் சேர 25 குழந்தைகள் மட்டுமே விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு அன்றைய தினமே சேர்க்கை வழங்கப்படும். மாறாக அதை விடக் கூடுதலான அளவில் விண்ணப்பித்திருந்தால் அந்தந்த பள்ளிகளில் பெற்றோர், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியின் நிர்வாகிகள் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெறும் குலுக்கல் மூலம் சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியது:- கடந்த 2013-ஆம் ஆண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 49,864 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2017-ஆம் ஆண்டு 90,607-ஆக உயர்ந்துள்ளது. ஒரு குழந்தைக்கான சேர்க்கைக்கு அதிகபட்சம் 5 பள்ளிகள் வரை விண்ணப்பிக்கலாம் என்பதால் பெற்றோர் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்துள்ளனர். குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர்ப் பட்டியலை அந்தந்த பள்ளிகளில் அறிவிப்புப் பலகையில் திங்கள்கிழமை அன்றே ஒட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றனர்.