முதுநிலை மருத்துவப் படிப்பில் தமிழக இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (மே 28) தொடங்க உள்ளது.
எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., முதுநிலை டிப்ளமோ ஆகிய படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு மே 19-ஆம் தேதி தொடங்கியது. மே 26-ஆம் தேதி வரை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு இடமும், தனியார் கல்லூரிகளில் 31 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் காலியாக உள்ளன.
மே 28, 29 ஆகிய தேதிகளில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். மே 30-ஆம் தேதி அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு நடைமுறைகளை வரும் மே 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.