மதுரையில் 4 ஆவது கல்வி மாவட்டம் அமைக்க முடிவு


மதுரை வருவாய் மாவட்டத்தில் ஏற்கெனவே 3 கல்வி மாவட்டங்கள் உள்ள நிலையில் தற்போது புதிதாக 4-ஆவது கல்வி மாவட்டம் அமைக்கப்படுகிறது.
மதுரை வருவாய் மாவட்டமானது கல்வித்துறை அடிப்படையில் மதுரை, மேலூர், உசிலம்பட்டி என 3 கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்வித்துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அதிக அதிகாரம் தரப்பட்டும், உதவி கல்வி அதிகாரிகள் அனைவரும் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டும் சில திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதுவரை தொடக்கப்பள்ளி, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஆய்வு அந்தந்த துறை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இனிமேல் வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதிக்குள்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வை மேற்கொள்ளலாம். மெட்ரிக்குலேசன் பள்ளி ஆய்வாளர் உள்ளிட்டோரும் இனி அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், முதன்மைக் கல்வி அலுவலரின் வேலைபளு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலுவலர்கள் அடிப்படையில் மட்டுமின்றி கல்வி மாவட்ட அளவிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி மதுரையில் பள்ளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஏற்கெனவே உள்ள மூன்று கல்வி மாவட்டங்களோடு நான்காவது கல்வி மாவட்டம் உருவாக்கப்படுகிறது. மதுரை வருவாய் மாவட்டத்தில் 2150 பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கும் 500 பள்ளிகள் என தற்போது பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்படவுள்ளது.