மாணவர்கள் இனி வகுப்புக்களை ‘கட்’ அடித்து வெளியே சுற்ற முடியாது.



கேரளாவில் மாணவர்களுக்கு போலீஸ் செக்: வகுப்புக்கு ‘கட்’ அடித்து வெளியே சுற்ற முடியாது
திருவனந்தபுரம்:  வகுப்புகளுக்கு கட் அடித்து விட்டு சினிமா, பார்க் என சுற்றும் மாணவர்களை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.
 சில மாணவர்கள் யாரும் சந்தேகப்படாமல் இருப்பதற்காக வீட்டிலிருந்து கிளம்பும்போதே புத்தகப்பையில் ரகசியமாக ஒரு சட்டையை மறைத்து வைத்து விட்டு பின்னர் அந்த சட்டையை போட்டு ஊர் சுற்றுபவர்களும் உண்டு.
 நகர்ப்புறங்களில் பல பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் அதை கண்டுகொள்வதில்லை. இதனால் அந்த மாணவர்கள் பல தவறான வழிக்கு சென்று விடுகின்றனர்.

 கேரளாவில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, பலாத்காரம் உட்பட பல கிரிமினல் வழக்குகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டது போலீசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புத்தகப்பையுடன் புறப்படும் இவர்கள் பள்ளிக்கு செல்லாமல் சினிமா, பார்க் என ஊர் சுற்றி வந்தனர்.
இதன் மூலம் கஞ்சா கும்பல்கள் மற்றும் கிரிமினல்களின் வலையில் சிக்கி நாளடைவில்  கிரிமினல்களாக மாறிவிடுகின்றனர்.
 ஆனால் இந்த விவரம் அவர்களது பெற்றோருக்கு தெரியாது.
 திருவனந்தபுரம், கொச்சி உட்பட நகரங்களில் இதுபோல மாணவர்கள் கிரிமினல்களாக மாறும் சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து அதை கட்டுக்குள் கொண்டுவர கேரள போலீஸ் கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.
 இதன்படி அனைத்து பள்ளிகளையும் தொடர்பு கொண்ட கேரள சைபர் கிரைம் போலீசார் மாணவர்களின் வருகை பதிவேடுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய கூறினர்.

பின்னர் அவை கேரள சைபர் கிரைம் போலீசின் புதிய சாப்ட்வேருடன் இணைக்கப்பட்டன.
 தினமும் வகுப்புகள் தொடங்கிய உடன் ஆசிரியர்கள் மாணவர்களின் வருகையை பரிசோதிப்பார்கள்.
 பின்னர் அந்த விவரங்கள் உடனடியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அந்த நொடியே மாணவர்கள் வருகை தொடர்பான அனைத்து விவரங்களும் போலீசுக்கு கிடைத்து விடும்.
தொடர்ந்து பள்ளிக்கு தாமதமாகவோ. அல்லது வராமலோ இருக்கும் மாணவர்களை போலீசார் கண்காணிக்க தொடங்குவார்கள்.
 தகுந்த காரணம் இல்லாமல் வகுப்புகளுக்கு வராமல் இருக்கும் மாணவர்கள் குறித்து போலீசார் உடனடியாக அவர்களது வீடுகளுக்கு தகவல் கொடுப்பார்கள்.
 இதேபோல சினிமா தியேட்டர்கள், பார்க்குகள் உட்பட பொது இடங்களிலும் போலீசின் கண்காணிப்பு இருக்கும்.
சந்தேகப்படும்படியாக மாணவர்கள் சுற்றுவது தெரிந்தால் உடனடியாக அவர்களை பிடித்து விசாரிப்பதும் உண்டு.
 கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் இந்த திட்டத்தை போலீசார் அறிமுகப்படுத்தினர்.
 இது வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த கல்வியாண்டு முதல் கேரளா முழுவதும் அமல்படுத்த போலீசார் தீர்மானித்துள்ளனர்.

 இதற்காக பெரும்பாலான பள்ளிகள் அந்தந்த உள்ளூர் போலீஸ் நிலையத்துடன் கணினி மூலம் இணைக்கப்பட்டு விட்டன.
கேரள போலீசின் இந்த நடவடிக்கை மூலம் இனி தங்களது குழந்தைகள் ஒழுங்காக பள்ளிக்கு செல்கிறார்களா என்று கவலைப்பட தேவையில்லை என பெற்றோர்கள் நிம்மதி தெரிவித்துள்ளனர்.