அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தில் குளறுபடி


 அரசின் செயல்பாட்டில் உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.தமிழகத்தில் 1.4.2003 முதல் அரசு பணியில் சேரும் ஊழியர்களுக்கு, புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்ததில் இருந்தே, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதுவரை இத்திட்டத்தில் 5 லட்சம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.22 ஆயிரம் கோடி. புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், திண்டுக்கல்லை சேர்ந்த ஏங்கல்ஸ் என்பவர் பல தகவல்களை கேட்டு இருந்தார்.


அதில் ஓய்வு பெற்றோரில், பங்களிப்பு ஓயவூதிய தொகை கேட்டு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர். பணப்பலன் பெற்றவர்களின் எண்ணிக்கை, இதுவரை வழங்கப்பட்ட தொகை, மாதாந்திர ஓய்வூதிய திட்ட விபரங்கள் குறித்து கேட்டிருந்தார். இதற்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை 8,323 பேர் விண்ணப்பித்ததில், 6,478 பேருக்கு ரூ258 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மாதாந்திர ஓய்வூதியம் வழங்க அரசு ஆணை எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.


இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து ஏங்கல்ஸ் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தில், மாதாந்திர ஓய்வூதியம் என்பது கிடையாது. ஒரு ஊழியரின் ஓய்வு அல்லது மறைவுக்கு பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர்ச்சியாக வழங்குவதே ஓய்வூதியம். ஆனால் ஓய்வூதியம் வழங்குவோம் என ஊழியர்களிடம் பணம் பிடித்தம் செய்து, ஓய்வூதியம் வழங்காதது நியாயமல்ல. எனவே, அ.தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்றார்