உயர்ந்தது தேர்ச்சி விகிதம்: அசத்திய அரசுப்பள்ளிகள்!


திருப்பூர் : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், 0.24 சதவீதம் உயர்ந்தது; கடந்தாண்டை விட, கூடுதலாக மூன்று பள்ளிகள் &'சென்டம்&' பெற்றது இதற்கு காரணமாக அமைந்தது.

திருப்பூர் மாவட்டத்தில், 135 அரசு பள்ளிகள் உள்ளன; 5,252 மாணவர்கள், 4,945 மாணவியர் என, 10 ஆயிரத்து 197 பேர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதினர். இதில், 4,968 மாணவர்கள், 4,763 மாணவியர் என, 9,761 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களில், 284 பேரும், மாணவியரில், 152 பேர் என, 436 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதில், மாணவர் தேர்ச்சி விகிதம், 94.59; மாணவியர் தேர்ச்சி விகிதம், 96.93 சதவீதம்; ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம், 95.72. கடந்தாண்டு, 95.48 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டு, 0.24 சதவீதம் கூடுதல் தேர்ச்சியை பெற்றுள்ளன.

கடந்தாண்டு, 59 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன; நடப்பாண்டு கூடுதலாக மூன்று பள்ளிகள், &'சென்டம்&' பட்டியலில் இணைந்தன.

மாவட்டத்தில், அதிகபட்சமாக, கே.எஸ்.சி., பள்ளியில், 401 மாணவர்கள் தேர்வெழுதியதில், 350 பேர் தேர்ச்சி பெற்றனர்; இது, 87.28 சதவீதம். குறைந்தபட்சம், தாசர்பட்டியில் இரு மாணவர், மூன்று மாணவியர் என, ஐந்து பேர் மட்டுமே தேர்வெழு, அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிக்கும் உடுமலை அம்மாபட்டி ஆதிதிராவிடர் அரசு உயர்நிலைப் பள்ளியில், நான்கு மாணவர், ஏழு மாணவியர் என, 11 பேர் தேர்வெழுதியதில், அனைவரும் தேர்ச்சி பெற்றனர். முதன் முறையாக இப்பள்ளி, நுாறு சதவீத தேர்ச்சி பெற்று, பாராட்டை பெற்றுள்ளது. 

திருப்பூர் கோவில் வழியில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இம்முறை, மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், உயர்ந்திருந்திருப்பது, கல்வித்துறையினரை திருப்தியடையச் செய்துள்ளது.