திருப்பூர் கல்வி மாவட்டம் 3 ஆக பிரிப்பு : உடுமலை, தாராபுரத்திலும் உருவாகிறது



உடுமலை: திருப்பூர் கல்வி மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு, புதிதாக உடுமலை, தாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறது. தமிழக அரசின் புதிய பாடத்திட்டம் மற்றும் கொள்கைப்படி, கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர், மாணவர்கள் வசதிக்காக 201819ம் கல்வியாண்டு முதல் இந்த சீர்திருத்தங்களை செயல்படுத்திட கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் இதுவரை செயல்பட்டு வந்த 67 கல்வி மாவட்டங்கள் 119 ஆக உயர்கிறது. அதன்படி, திருப்பூர் கல்வி மாவட்டம் உடுமலை, தாராபுரம், திருப்பூர் என 3 ஆக பிரிக்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து, டிஇஓ, டிஇஇஓ, ஐஎம்எஸ், போன்ற சம அந்தஸ்து உடைய பதவிகள் அகற்றப்பட்டு, டிஇஓ என்னும் ஒரே பதவியின்கீழ் நிர்வாகம் செயல்பட உள்ளது. அதேபோல், ஏஇஇஓ என்னும் பதவி பிஇஓ என்ற புதிய பெயரில் செயல்படும். எனவே, மாவட்ட கல்வி அலுவலரின்கீழ் 3 அல்லது 4 வட்டார கல்வி அலுவலர்கள் (பிஇஓக்கள்) செயல்படுவார்கள். பிஇஓ என்பவர் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையுள்ள தொடக்கப்பள்ளிகள், 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள நடுநிலைப்பள்ளிகள் ஆகியவற்றை நிர்வகிப்பார்.

மாவட்ட கல்வி அலுவலர்கள் துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளை நிர்வகிப்பார். இந்த மூன்று மாவட்ட கல்வி அலுவலர்களையும் நிர்வகித்து, ஆணைகள் வழங்கி முதன்மை கல்வி அலுவலர் செயல்படுவார். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோரின் பணிச்சுமை மற்றும் கல்வி அலுவலகங்களுக்கு அலைவது குறையும். நிர்வாகம் மேம்படும் என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.