மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்!" - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்


வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்ட விவகாரம் பூதாகாரமாக மாறிய நிலையில், ``மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்" என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயச்சந்திரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.



சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற `பொன்மாலை பொழுது' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயச்சந்திரன், நடிகர் சூர்யாவின் `அகரம் ஃபவுண்டேஷன்' சார்பில் `அறம் செய விரும்புவோம் - அகரம் விதைத்திட்ட வெற்றிக் கதை' என்ற புத்தகம் வெளியிட்டார்.

விழாவில் பேசிய உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், ``நான் சென்னையில் அதிகம் நேசிக்கக்கூடிய இடங்களில் அண்ணா நூற்றாண்டு நூலகமும் ஒன்று. `இந்த நூலகத்தில் அரங்கம் நிரம்பி வழியாதா' என்ற ஏக்கத்திலேயே பல இரவுகள் கழிந்தன. தற்போது அரங்கம் நிரம்பி இருப்பதைப் பார்க்கும்போது மனது பட்டாம்பூச்சியாகச் சுற்றுகிறது.

இந்த மேடையில் பேசக் கூடாது என்றுதான் உறுதிமொழி வாங்கி வந்தேன். `பொன்மாலை பொழுது' நான் அமைத்துக்கொடுத்த மேடை. நானே பேசவில்லை என்றால் நீதிக்கு எதிரானது என்பதால், சில கருத்துகளை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.

எந்த ஒரு சமுதாயமும் தந்தை இல்லாத மகனை கருணையோடு பார்க்கும். ஆனால், தாயை இழந்த குடும்பத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என யோசித்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இலவசக் கல்விக்கான வாய்ப்பு வழங்கி வருவது அகரத்தின் சிறப்பு. இதுபோன்ற விஷயங்களை அரசும் கற்றுக்கொள்ள வேண்டும்.

அகரம் அமைப்பின் இன்னொரு முக்கியமான அம்சம், வழிகாட்டுதல் (Mentrorship). என்னுடைய நண்பர்கள் பல நாடுகளில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். என்னுடன் பொறியியல் படிப்பில் படித்தவர்களின் நிறுவனங்களில், எப்படி ஆள்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை அறிவேன்.


அங்கு நெட்வொர்க்கிங் மூலமே பெரும்பாலானோரைத் தேர்ந்தெடுக்கின்றனர். நாம் படித்த கல்லூரியில் சற்று முன்னுரிமை கொடுப்பது மிகவும் அதிகம். அண்ணா, அக்கா என்று அழகாக வழிகாட்டி அழைத்தது சிறப்பு. அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளிலும் வழிகாட்டுதல் சற்று குறைவாக இருக்கிறது. இதையும் அகரத்திடமிருந்து அரசு கற்றுக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. குறைந்தபட்சம், ரௌத்திரம் பழகக் கற்றுக்கொள்ள வேண்டும். சமூக அவலங்களைக் கண்டு கோபம்கொள்ளாவிட்டால், சமூகத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கிட முடியாது

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, ஒரு மாணவன் பள்ளிப் படிப்பிலிருந்து கல்லூரிப் படிப்பைப் படிக்கச் செல்லும்போது, அவனின் குடும்பம் பொருளாதாரரீதியான சிக்கலில் விழுகிறது. கல்லூரியில் படிக்கும்போது கல்விக் கட்டணம் சரியாகக் கட்ட முடியவில்லை. கல்விக்கடன் கேட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகியபோது, வங்கி மேலாளர் `கல்விக்கடன் தர முடியாது' என வங்கியிலிருந்து வெளியே அனுப்பிவிடுகிறார். மிகவும் கடினப்பட்டு கல்லூரிப் படிப்பை முடிக்கிறான் அந்த மாணவன்.

படிப்பைப் முடித்த பிறகும் பலவிதமான கஷ்டங்களுக்கு மத்தியில் சமூகத்தில் முக்கியமான இடத்துக்கு வரும்போது தன்னுடைய எதிரி யார் என்பதை அவனே முடிவுசெய்கிறான். தன்னுடைய இளமைக்காலத்தில் கஷ்டப்பட்டதைபோல் மாணவர்கள் கஷ்டப்படக் கூடாது என நிறைய மாணவர்களுக்குக் கல்விக்கடன் கிடைக்க முயல்கிறான். அந்த நபர் வேறு யாருமல்ல உதயச்சந்திரனாகிய நான்தான்.