பள்ளிகளுக்கு இலவச பாடபுத்தகம் அனுப்பும் பணி துவக்கம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வரும் கல்வியாண்டில் ஜூன் 1ம் தேதியன்று மாணவர்களுக்கு வழங்குவதற்கான இலவச பாட புத்தகங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையானது, வரும் மே 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. பின், ஜூன் மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளன. இந்நிலையில், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச பாடபுத்தகங்கள் அனைத்தும், தமிழ்நாடு பாடநூல்கழகம் மூலம் அச்சிடப்பட்டு, அந்தந்த கல்வி மாவட்டம் வாரியாக வினியோகிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, சுயநிதிபள்ளி, ஆதிதிராவிட நல பழங்குடியினர் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதற்காக, தமிழக அரசு பாடநூல் கழகம் சார்பில் அச்சிடப்பட்ட அனைத்து பாடத்திட்டங்களுக்குண்டான புத்தகங்களும், கோட்டூர் ரோட்டில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு வரபெற்றது. இந்நிலையில், கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் வால்பாறை தாலுகாவிற்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இலவச பாட புத்தங்கள் மற்றும் நோட்புக் வினியோகிக்கும் பணி நேற்று முதல் துவங்கியது. பள்ளி வாரியாக பாட புத்தகங்கள் சரிபார்க்கப்பட்டு, அந்தந்த பள்ளிகளுக்கு கல்வி மாவட்ட அலுவலர் நாசரூதின் முன்னிலையில், சரக்கு வாகனங்களில் பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது. இப்பணி வரும் 30ம் தேதி வரை தொடர்ந்து நடப்பதாகவும். பின், ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கும்போது, மாணவ, மாணவிகளுக்கான அனைத்து இலவச பாடப்புத்தகம் ஒரே நாளில் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.