உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான நீட்: விண்ணப்பிக்க இன்று கடைசி


உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு வியாழக்கிழமை (மே 31) கடைசியாகும்.

நாடு முழுவதும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம்., எம்.சிஎச். ஆகிய படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,215 இடங்கள் உள்ளன. அவற்றில் தமிழத்தில் 192 இடங்கள் உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக இடங்கள் உள்ளன. 

பொதுவாக எம்.பி.பி.எஸ். படிப்பில் 15 சதவீதம், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் மட்டுமே அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும். மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வை அந்தந்த மாநில அரசுகளே நடத்தும். ஆனால், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரையில் அனைத்து இடங்களுக்கான கலந்தாய்வையும் மத்திய சுகாதார சேவைகள் இயக்ககமே நடத்துகிறது.

அந்த வகையில் 2018 - 2019-ஆம் கல்வியாண்டுக்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மே 11-ஆம் தேதி தொடங்கின. ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்து அனுப்புவதற்கு மே 31-ஆம் தேதி கடைசியாகும். ஜூலை 6-ஆம் தேதி தேர்வு நடைபெற்று, ஜூலை 15-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.