அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு


ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரும் நேரத்தை உறுதி செய்திட பள்ளிகளில் பயோ-மெட்ரிக் கருவி பொருத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோ-மெட்ரிக் கருவி நடைமுறைப்படுத்தப்படும். தமிழக மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்த அரசுப் பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கப்படும். 

மாணவர்கள் தங்களுடைய பாடத் திட்டத்தோடு திறன் சார்ந்த கல்வியைப் பெறும் வகையில் தொழிற்கல்வித் திட்டமானது 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும். 

மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் சிறந்த முறையில் பயிற்சி வழங்கிட ஏதுவாக அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. 

முதல் கட்டமாக நிகழ் கல்வியாண்டில் 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் கணினி உபகரணங்கள் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

பள்ளிக்கு ஈர்த்தல்: மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில், அரசுப் பள்ளிகளுக்கு அவர்களை ஈர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டம் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வரும் கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

ஆதார் சேர்க்கை மையங்கள்: அனைத்து ஒன்றியத் தலைமையிடங்களிலும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஆதார் சேர்க்கை மையம் ஏற்படுத்தப்படும்.

விளையாட்டு மேம்பாடு:மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் தேவையான கருவிகள் வழங்கி சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் 32 விளையாட்டு மேம்பாட்டுப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.