கலை பட்டய படிப்புகளான BA History, English, Tamil போன்ற படிப்புகள் படித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - II ல் பெருமளவு கேள்விகள் (60/150) சமூக அறிவியல் பாடத்திலிருந்தே கேட்கப்படுகின்றன.
வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு இப்பகுதி மிகவும் எளிதாகப்பட்டாலும், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற கலைத்துறை மாணவர்களுக்கு இது ஒரு சோதனையாகவே இருக்கிறது. வரலாறு படிக்காத பிற கலைத்துறை மாணவர்களையும் சமூக அறிவியல் பகுதியில் அதிக மதிப்பெண் பெறச்செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.
TNTET தேர்வு தாள் இரண்டுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு புத்தகத்தை படிக்க வேண்டும். 6 வது முதல் 10 வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடம் கீழ்கண்ட நான்கு பிரிவுகளில் இருக்கும்.
வரலாறு (History)
புவியியல் (Geography)
குடிமையியல் (Civics or Polity)
பொருளாதாரம் (Economics)
வரலாறு என்றாலே காலங்கள், நிகழ்வுகள் மற்றும் பெயர்கள் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். உண்மையும் அது தான். ஆனால் உண்மையான ஆர்வத்துடன் படித்தால் வரலாறு போல் இனிப்பது ஒன்றுமில்லை.
ஒரு வரலாறு பாடப் பகுதியை படிக்க துவங்கும் முன்னர் "அதிலுள்ள வருடங்களையும், பெயர்களையும் எப்படி மனப்பாடம் செய்வது?" என்று பதட்டப்படாமல் படிக்கத் துவங்குங்கள்.
காலக்கோடு
வரலாற்றில் வரும் வருடங்களை எளிதாக நினைவு கூற "காலக்கோடு முறை" மிக சிறந்தது. ஒவ்வொரு பகுதிக்கும் தனிதனி காலக்கோடுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். கடைசியாக பார்க்கும் போது "சிந்து சமவெளி முதல் அ.தி.முக ஆட்சி 2018 வரை" வருடங்களை மிகவும் எளிதாக உங்களால் கூற முடியும்.
உதாரணமாக 'இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை" கீழ்க்கண்ட காலக்கோட்டின் மூலம் விளக்கலாம்.
1885 - இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம்
1905-வங்கப்பிரிவினை
1906 - முஸ்லிம் லீக் தோற்றம்
1907-சூரத் பிளவு (காங்கிரசுக்குள்)
1919-மாண்டேக்-செம்ஸ்போர்டு சீர்திருத்தம்
1920 -கிலாபத் இயக்கம்
-- இப்படி நீங்களே ஒரு காலக்கோட்டை தயாரித்து, ஒவ்வொரு வருடத்தோடும் தொடர்புடைய நிகழ்வுகளை, பெயர்களை மிகவும் எளிதாக நினைவில் கொள்ளலாம்.
6 முதல் 12 ஆம் வகுப்பு புவியியல் பாடப்பகுதி அதிலும் குறிப்பாக 7 மற்றும் 11 வகுப்பு பாடப்பகுதியை பார்த்தாலே பலருக்கு கசப்பாக இருக்கும். ஆனால் சில முக்கியமான உபகரணங்களுடன் படிக்கும் போது அது மிகவும் எளிதாக மாறிவிடும். அந்த உபகரணங்கள் Atlas மற்றும் Maps தான். உதாரணமாக கண்டங்களைப் பற்றி படிக்கிறீர்கள் எனில், நிச்சயமாக ஒரு உலக வரைபடத்தை கையில் எடுத்துக்கொண்டு அமெரிக்கா, ஆசியா என ஒவ்வொரு கண்டங்களையும் நீங்களே கண்டுபிடியுங்கள். அது போல, எந்த ஒரு இடத்தின் பெயரை படிக்கும் போதும் அவற்றை உலக அல்லது இந்திய வரைபடத்தில் பாருங்கள். உலகில் உள்ள நாடுகள், நதிகள், கால நிலைகள் எல்லாமே இந்த வரைபடங்களில் உள்ளடக்கம். புவியியல் பகுதியில் நீங்கள் பெறவிருக்கும் மதிப்பெண்கள் உட்பட.
ஒரு சாதாரண குடிமகன் அறிநதிருக்க வேண்டிய தகவல்களான, அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், தேசிய சின்னங்கள், அரசியல் முறை, பாராளுமன்றம், சட்டமன்றம், குடியரசு தலைவர், பிரதமர் என அனைத்தும் ஆர்வமூட்டும் விசயங்களே இருப்பதால். குடிமையியல் பகுதிக்கு தயாராக உங்களுக்கு தனியே ஆலோசனைகள் தேவையில்லை.
முதலில் பொருளாதாரத்தைப் பற்றிய அடிப்படை கருத்துக்களை சந்தேகமின்றி புரிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக Inflation, NDP, NGP, FDI போன்ற வார்த்தைகளை படிக்கும் போது சரியான புரிதல் இன்றி படிப்பீர்கள் எனில் உங்கள் மொத்த நேரமும் முயற்சியும் வீணாகி விடும். எனவே பொருளாதார பாடப்பகுதியை படிக்கும் போது அவற்றில் வரும் முக்கியமான concept ஐ புரிந்து கொண்டு படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.
நன்றி : அல்லா பக்ஷ்