பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ள காரணத்தை சுட்டிக் காட்டி பிளஸ் 1 வகுப்புக்கு அதே பள்ளியில் சேர்க்கை வழங்க மறுக்கக் கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ள காரணத்தைச் சுட்டிக் காட்டி பிளஸ் 1 வகுப்புக்கு அதே பள்ளியில் சேர்க்கை வழங்க தனியார் பள்ளிகள் மறுக்கக் கூடாது. அதே வேளையில் பத்தாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு பிளஸ் 1 வகுப்பின் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கடந்த 2017-2018-ஆம் ஆண்டில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேல்நிலை வகுப்புகள் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகால படிப்பாக கருதப்பட வேண்டும். பிளஸ் 1 முடித்து தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பு முடிக்கப்பட வேண்டும்.
பிளஸ் 1 வகுப்பில் தோல்வி அடைந்தால்...: ஆனால், தற்போது பிளஸ் 1 வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றது, சில பாடங்களில் தோல்வி அடைந்தது ஆகிய காரணங்களைச் சுட்டிக்காட்டி அந்த மாணவர்களை மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு பள்ளி மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் நிர்வாகம் வற்புறுத்துவதாக பெற்றோர் புகார் அளித்து வருகின்றனர்.
இதுபோன்ற செயல்பாடுகள் முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல. பிளஸ் 1 வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களை தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் பயில அனுமதித்து சிறப்பு பயிற்சி அளித்து அவர்களை தேர்வில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களையும் தோல்வி அடைந்த மாணவர்களையும் ஊக்குவித்து வெற்றி பெறச் செய்வதே பள்ளியின்முதன்மையான கடமையாக இருக்க வேண்டும்.
மாற்றுச் சான்றிதழ் பெற வற்புறுத்தக் கூடாது: பிளஸ் 1 வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற, தோல்வி அடைந்த மாணவர்களை மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுமாறு பெற்றோரை பள்ளி நிர்வாகம் வற்புறுத்தக் கூடாது.
இந்த சுற்றறிக்கையை அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அனுப்பி அதன்படி செயல்படத்தக்க அறிவுரை வழங்க வேண்டும். மேலும் இந்தப் பிரச்னை சார்ந்த புகார்கள் வந்தால் அவற்றின் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு மாணவர்களின் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.