பி.இ. சேர்க்கை: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு பிரிவு, காலை 10 மணி முதல் 11 மணி வரை இரண்டாம் பிரிவு என தினமும் 8 பிரிவுகளாக இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
20,000 மாணவர்கள்: சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மையத்தில் ஒரு பிரிவுக்கு 250 பேர் வீதம் முதல் நாளில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2,000 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இதுபோல தமிழகம் முழுவதும் 20,000 பேர் அழைக்கப்பட்டனர்.

இரண்டாம் நாளான சனிக்கிழமை முதல் 24,000 மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட உள்ளனர் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைச் செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.

ஜூன் 17-ஆம் தேதி வரை...இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறும். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் உதவி மையத்தில் மட்டும் 3 நாள்கள் கூடுதலாக ஜூன் 17-ஆம் தேதி வரை நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பில் மாணவர்கள் பங்கேற்க இயலவில்லை எனில், பெற்றோரிடம் புகைப்படத்துடன் கூடிய அத்தாட்சிக் கடிதத்தையும், சான்றிதழையும் கொடுத்து அனுப்பலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

செல்ல முடியாத மாணவர்கள்...குறிப்பிட்ட தேதியில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள், ஜூன் 14-ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஊட்டி உதவி மையம் தவிர வேறு ஏதாவது ஒரு உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லலாம். இந்த வாய்ப்பையும் பயன்படுத்த இயலாத மாணவர்கள் ஜூன் 17-ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாக உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லலாம்.
Designed by OddThemes | Distributed by Gooyaabi