தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வாரந்தோறும் தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சக்திவேல் பேசுகையில், மேல்பள்ளி பாடத்திட்டத்தில் ஜவுளி மேலாண்மையை புதிய பாடப்பிரிவாக உருவாக்க அரசு ஆவண செய்யுமா? என்று கேட்டார்.
இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மேல்நிலைப்பள்ளிப் பாடத்திட்டத்தில் தொழிற்கல்வி பிரிவில் துணிகளும், ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை தொழில்நுட்பம் என்ற பாடங்களில் ஜவுளி மேலாண்மை குறித்த கருத்துகள் மாணவர்களுக்கு ஏற்கனவே கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு 2017ன்படி மேல்நிலைக் கல்வி தொழிற்கல்வி புதியபாடத்திட்டத்தில் ஜவுளி மேலாண்மை, தற்கால நுட்பங்கள் குறித்த கருத்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் தொழிற்கல்வி பயின்று வரும் மாணவர்கள் வாரத்திற்கு ஒரு முறை தொழிற்சாலைகளுக்கு நேரில் அழைத்து பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.