சென்னை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மத்திய அரசின் 4 ஆண்டுகால சாதனை பட்டியல் புத்தகத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தொழில்கள் மூடப்பட்டதற்கு ஜி.எஸ்.டி. காரணம் என்பது ஏற்புடையதல்ல. நாங்கள் சிறு, குறு தொழில்களை மூட சொல்லவில்லையே. வியாபாரம் ரூ.20 லட்சத்துக்கு கீழ் இருந்தால் ஜி.எஸ்.டி.க்கு முன்பு எப்படி செய்தீர்களோ? அதை தான் செய்யப்போகிறீர்கள்.
தூத்துக்குடியில் நடந்தது நியாயமான போராட்டம். போராட்டம் நடத்துபவர்களோடு மாநில அரசு அதிகாரிகள் தான் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். 100-வது நாள் போராட்டம் திசைமாறியது. அதில் பலர் உயிரிழந்தார்கள். விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைத்து இருக்கிறது. அதில் கருத்து சொல்ல முடியாது. ராஜ்நாத்சிங், அமித்ஷா ஆகியோர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள்.
கருப்பு பணம் பற்றி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. கருப்பு பணத்தை மீட்க நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் காபினெட்டில் எஸ்.ஐ.டி. அமைத்தோம்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியாவை துண்டு, துண்டாக்கிவிடுவோம் என்று சிலர் போராட்டம் நடத்தியபோது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நின்றார். அவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. அதனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவின் பெயரில் மிரட்டல் வந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் எந்த பொருளோடு ஒப்பிட்டு அதிக விலைக்கு வாங்கியதாக சொல்கிறார்கள்? என்று தெரியவில்லை. போர் விமானங்கள் தேவை இருந்தும், வாங்காமல் போனவர்கள் வாங்கியவர்களை குற்றம்சாட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் எதுவும் இல்லை.
‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்த மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது வருத்தத்துக்குரியது. ‘நீட்’ தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். அனைத்து மாநிலங்களின் ஒப்புதலை பெற்ற பின்பே ‘நீட்’ தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கிராம தபால் ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்து அவர்களுடன் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துரையாடிய நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது. இதில் தலைமை அஞ்சலக அதிகாரி சம்பத், போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசும்போது, “இந்த இணையதள யுகத்தில் கூட போஸ்ட்மேனுக்கு இருக்கக்கூடிய மதிப்பு இன்னும் குறையவில்லை. நீங்கள் பல நாட்களாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக போராடி ஊதிய உயர்வை பெற்றுள்ளர்கள். உங்களின் சகிப்புத்தன்மையை பாராட்டுகிறேன். மத்திய அரசு ஊழியர்களுக்கு அடையாளமே நீங்கள்(போஸ்ட் மேன்) தான்” என்றார்.
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள மத்திய அரசின் எச்.வி.எப். நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (பெல்) சார்பில் 80 ஏக்கரில் ரூ.105 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் திறந்துவைத்தார்.