பள்ளிக்கூடங்களைத் திறக்கும் முன்னர், ஒரு வல்லுநர் குழுவை அரசு நியமித்து, அதன் வழிகாட்டுதலோடு திட்டமிடுவதே அறிவார்ந்த வழிமுறையாகும் -இந்து தமிழ் கட்டுரை


முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசில், பொதுச் சமூகத்திடமிருந்தும் ஊடகங்களிடமிருந்தும் வரக் கூடிய யோசனைகள், விமர்சனங்களுக்கு அதிகம் ஆக்கபூர்வமான எதிர்வினையாற்றும் அமைச்சகங்களில் ஒன்று எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சகத்தைக் குறிப்பிடலாம்.
ஆனால், இந்தக் கொள்ளை நோய் காலகட்டத்தில் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை எடுக்கும் பல முடிவுகள்தான் சாமானிய மக்களையும், மாணவர்களையும் வெகுவாக அலைக்கழிப்பதாக இருக்கின்றன; பொதுச் சமூகத்தின் யோசனைகளை அது கவனிப்பதாகவே தெரியவில்லை. கொரானா பெரும் சிக்கலாக உருவெடுத்துவந்த காலத்திலும் எப்படியும் பொதுத் தேர்வுகள் அத்தனையையும் நடத்தி முடிப்பது என்பதில் தொடக்கத்திலிருந்தே பள்ளிக்கல்வித் துறை உறுதிகாட்டியது. கொள்ளைநோய் பரவத் தொடங்கி ஊரடங்கு நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கும் நாட்களில் படிக்கும் மாணவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்று அது பொருட்படுத்தவே இல்லை.
ஊரடங்கு அறிவிப்பை ஒட்டி தேர்வுகளைக் கடைசி நேரத்தில் நிறுத்தி அறிவிப்பு வெளியிட்ட அது, தேர்வு நாட்களை அறிவிப்பதில் இன்றுவரையிலும் தொடர்ந்து அவசரம் காட்டியே வருகிறது. இதுவரையிலான உலகளாவிய முன்னனுபவங்கள் நமக்குச் சொல்லும் பாடம், கொரானா பரவலானால் குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்குப் பலர் கூடும் வாய்ப்புள்ள எந்த விஷயத்தையும் திட்டமிடவே முடியாது என்பதேயாகும். தமிழ்நாட்டில் கொரானா பரவலான நாட்களைக் கணக்கில் கொண்டால், எப்படிப் பார்த்தாலும் குறைந்தது ஜூன் இறுதி வரை எதையும் நாம் திட்டமிடவே முடியாது.
இந்தச் சூழலில் பொதுத் தேர்வுகளை ஜூன் மத்தியில் தொடங்க விழையும் பள்ளிக்கல்வித் துறையின் திட்டத்தை எப்படிப் பார்ப்பது? தமிழ்நாட்டில் ஒவ்வொரு பள்ளிக்கூடமும் பல நூறு மாணவர்களையும், நெருக்கமாக அவர்கள் அமரும் வகையிலான நெரிசலான உள்கட்டமைப்பையும் கொண்டது. பத்தாம் வகுப்புத் தேர்வை எடுத்துக்கொண்டால், மாணவர்கள் – ஆசிரியர்கள் – தேர்வுப் பணியாளர்கள் என்று சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்ட பணி அது. தேர்வையே இந்த ஆண்டில் ரத்துசெய்திடலாம் என்ற கோரிக்கையைக் கல்வியாளர்கள் முன்வைத்தனர். சத்தீஸ்கர் அதைத்தான் செய்திருக்கிறது.

தமிழகப் பள்ளிக்கல்வித் துறையோ, எப்படியும் தேர்வுகளை நடத்தியே தீர்வது என்று முடிெவடுத்தது. சரி, குறைந்தபட்சம் ஜூலை வரை அதை ஒத்திப்போடுவதில் என்ன பிரச்சினை? நாட்டிலேயே முதலில் கொரானாவால் பாதிக்கப்பட்டதும் வேகமாக அதிலிருந்து மீண்டுவருவதுமான கேரளம் தேர்வுகளை நடத்துவது தொடர்பில் இன்னும் முடிெவடுக்கவில்லை என்று அறிவித்திருக்கிறது!
ஒவ்வொரு நாளும் பல நூறு பேர் தொற்றுக்குள்ளாகும் தமிழகத்தில் தேர்வு நடத்த அப்படி என்ன அவசரம்? தேதி குறிப்பிட்டுத் தேர்வுகளை அறிவித்து, மீண்டும் மீண்டும் தேர்வுகளைத் தள்ளிவைப்பதில் உள்ள கொடுமை என்னவென்றால், மாணவர்கள் பெரும் மனவுளைச்சலுக்கும் அலைக்கழிப்புக்கும் ஆளாவதுதான். ஒரு நெருக்கடியான மனநிலையிலேயே இந்த விடுமுறைக் காலம் முழுவதையும் அவர்கள் கழிக்கிறார்கள்.
நம் நாட்டில் மாநிலக் கல்வி வாரியங்கைளப் பொறுத்த அளவில் அரசு மற்றும் அரசுசார் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையை தேர்வர்களில் பெரும் தொகையிலானது. கொள்ளைநோய், ஊரடங்கு காரணமாக இவர்களில் பெரும் தொகையிலான குடும்பங்கள் வேலையிழப்பையும் வருமான இழப்பையும் சந்தித்து, எதிர்காலம் தொடர்பிலான அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில், பிள்ளைகள் என்ன மாதிரியான மனநிலையில் இருப்பார்கள், எப்படி அவர்களால் தேர்வுக்குத் தயாராக முடியும்?
மாநில, மாவட்ட எல்லைகள் பூட்டப்பட்டு, பொதுப் போக்குவரத்துக்கு வழியில்லாத சூழலில், சென்னையில் தேர்வு எழுத வேண்டிய ஒரு ஏழை மாணவர் வெளியூரில் இருப்பாரயானால், எந்த வாகனத்தில், யார் செலவில் அவர் சென்னையை வந்தடைய முடியும்? வெளிமாவட்டங்களிலிருந்து ஓரிடத்துக்கு வருபவர்களைத் தனிமைப்படுத்தச் சொல்கிறது அரசு. உண்டு உறைவிடப் பள்ளியில் பத்துப் பதினைந்து மாவட்டங்களைச் சேர்ந்த பிள்ளைகள் படிப்பது வழக்கம்; ஊரடங்கை ஒட்டி சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்ட பிள்ளைகள், தேர்வின் நிமித்தம் பள்ளிக்குத் திரும்பும்போது விடுதிச் சூழல் எப்படித் தனிமைப்படுத்தலை அனுமதிக்கும்?
ஒருவேளை பரிசோதனை, தனிமைப்படுத்ததலிருந்து அவர்களுக்கு விலக்களித்தால், கிருமித் தொற்றோடு வரும் ஒரு மாணவரை எப்படிக் கண்டறிவது; அவர் வழியே தொற்று பரவினால் என்ன செய்வது? தேர்வு அறைகளில்கூட தனிநபர் இடைவெளி சாத்தியமாகலாம்; மூன்று மணி நேரம் தேர்வு எழுதி முடித்துவிட்டுக் கூட்டமாகக் கழிப்பறைக்கு ஓடும் மாணவர்களை எப்படித் தடுத்து நிறுத்த முடியும்? கேள்விகளை நீட்டிக்கொண்டே செல்லலாம். மிக மோசமான முடிவு இது என்பதைத் தவிர, சொல்ல வேறு ஒன்றுமில்லை.
குறைந்தபட்சம் ஜூலை தொடக்கம் வரை தேர்வுகளைப் பற்றி சிந்திக்காமல் இருப்பதே நல்லது. இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்திலிருந்து அப்படியே பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்களைக் கொண்டுசெல்லும் முடிவானது பல விளைவுகளை உண்டாக்கும். பள்ளிக்கூடங்களைத் திறக்கும் முன்னர், ஒரு வல்லுநர் குழுவை அரசு நியமித்து, அதன் வழிகாட்டுதலோடு திட்டமிடுவதே அறிவார்ந்த வழிமுறையாகும்

0 Response to "பள்ளிக்கூடங்களைத் திறக்கும் முன்னர், ஒரு வல்லுநர் குழுவை அரசு நியமித்து, அதன் வழிகாட்டுதலோடு திட்டமிடுவதே அறிவார்ந்த வழிமுறையாகும் -இந்து தமிழ் கட்டுரை"

Post a Comment