விளாம்பழத்தின் மருத்துவ குணம்!


நன்றி குங்குமம் தோழி

‘விளாம்’ பழங்கள் பலராலும் விரும்பி உண்ணப்பட்டாலும், யாரும் ஆர்வமாக இதை வளர்க்க முன்வராததால், இது ஒரு அரிய வகை மரமாக மாறி விட்டது. விளாமரங்களை வணிக ரீதியில் வளர்த்தால், நல்ல லாபம் பெறலாம். அத்தகைய, ஆதாயம் நிறைந்த விளாமரம் பற்றிய சில தகவல்கள். விளா மரத்தின் தாவர அறிவியல் பெயர் (Ferouia Elephautum). ஆங்கிலத்தில் (Wood Apple) என்று அழைப்பர். இதன் தாயகம் இந்தியா. பிறகு பாகிஸ்தான், இலங்கை, தைவான், மியான்மர் ஆகிய நாடுகளில் விளைவிக்கப்பட்டது. காடுகளில் அதிகம் காணப்படும். தோட்டங்களிலும், கோயில்களிலும் இவை வளர்க்கப்படுகின்றன. காயாக இருக்கும்போது, இதன் சதை துவர்க்கும். பழுத்தால் துவர்ப்பும், புளிப்பும் கலந்த புதுச்சுவையாயிருக்கும். விளாம்பழ ஓடுகளை கைவினைப் பொருள்கள் செய்யவும் பயன்படுத்துவார்கள்.

மருத்துவ குணங்கள்

* தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்துள்ள பழம். ரத்தத்தை விருத்திப்படுத்துவதோடு சுத்திகரிப்பும் செய்கிறது.

* விளாம்பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமாக இருப்பதால் பல், எலும்புகள் வலுவடையச் செய்கின்றன.

* தயிருடன் விளாங்காயைப் பச்சடிபோல் செய்து சாப்பிட்டால், வாய்ப்புண், குடல்புண் (அல்சர்) குணமாகும்.

* வெல்லத்துடன் விளாம்பழச் சதையைப் பிசறி சாப்பிட்டு வர, நரம்புத்தளர்ச்சி விரைவில் நிவர்த்தியாகும்.

* விளாம்பழ மரத்தின் பிசினைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் குணமாகும்.

* விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச்சுற்றல் நிற்கும்.

* தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர, நினைவாற்றல் அதிகரிக்கும்.

* விளாமர இலையைத் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க வாயுத்தொல்லை நீங்கும்.

* விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.

* பெண்களுக்கு மார்பகம், கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும். நல்ல வலி நிவாரணியாகவும் விளாம்பழம் செயல்படுகிறது.

* இதன் கொழுந்து இலையை நீரில் போட்டுக் குடித்துவர வாயுத்தொல்லை அழியும். பித்தத்தைத் தணிக்கவும் இதன் இலையானது உதவுகிறது.

* பித்த வெடிப்பு, தோல் வறட்சி குணமாக விளாம்பழ இலைச்சாற்றை தடவி வந்தால் போதும்.

* விக்கல், அஜீரணம், வயிற்றுப்போக்கு இவற்றுக்கு விளாம்பழ இலைச்சாறை பாலில் கலந்து குடித்தால் போதும்.

* பசி எடுக்க விளாமர இலையை சிறிது எடுத்து அரைத்து பசும்பால், கற்கண்டுடன் சாப்பிட்டு வர காசம், கணச்சூடு, இளைப்பு குணமாகும்.

* வேர்க்குருவுக்கு இம்மர இலைக்கொழுந்து சாறினை தடவிவர குணமாகும்.

* விளாமர பிசினை உலர்த்திப் பொடி செய்து தினமும் காலையில் தேனில் குழைத்து தின்றுவர வறட்டு இருமல், கபம், பித்த சுரம், நெஞ்செரிவு குணமாகும்.

* விளாம்பிசினை பாலில் ஊற வைத்து சர்க்கரை கலந்து உண்டுவர நரம்புத்தளர்ச்சி, களைப்பு நீங்கும்.

தொகுப்பு: இல.வள்ளிமயில், மதுரை.

0 Response to "விளாம்பழத்தின் மருத்துவ குணம்!"

Post a Comment