மிளகாய்னா காரம் மட்டுமே இல்லைங்க


நன்றி குங்குமம் டாக்டர்

‘‘நம் அன்றாட வாழ்வியலில், நமது உணவில் மிளகாயின் பங்கு முக்கியமானது. ஆனால், மிளகாயின் பலன் காரம் மட்டுமே அல்ல. மருத்துவரீதியாகவும் பலன் தரக்கூடியது என்பது எல்லோருக்கும் தெரியாது. அதில் உள்ள கார்ப்பு சுவை நம் உடலுக்கு ஒரு உறுதியையும், வீரத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கிறது’’ என்ற சித்த மருத்துவர் சதீஷ்குமார் மிளகாய் பற்றியும் அதன் மருத்துவ பயன்கள் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். ‘‘நாம் இன்று பயன்படுத்தும் மிளகாய் அமெரிக்க நாட்டிலிருந்து வந்தது. நம் முன்னோர்கள் மிளகாய்க்கு பதிலாக மிளகு பயன்படுத்தி வந்தனர்.

சுவையில் இரண்டும் கார்ப்பு சுவை உடையது. பிறகு காலப்போக்கில் அந்நிய ஆதிக்கத்தினால் மிளகாய் நம் நாட்டின் அனைத்து சமையல் அறையிலும் மையம் கொண்டுள்ளது. அறுசுவைகளுள் கார்ப்பு சுவை தனி சிறப்பு வாய்ந்தது. நாம் உண்ணும் உணவின் சுவை கார்ப்பு சுவையுடைய மிளகாயின் சேர்க்கையைப் பொறுத்து அமைகிறது என்றே சொல்லலாம். இது ஒரு காரமான காய் என்பதால் மிளகாய் என்ற பெயர் வந்தது. இதை மோர் மிளகாய், மிளகாய் ஊறுகாய், மிளகாய் வற்றல் என்று பல வகைகளில் நாம் தற்போது உணவில் பயன்படுத்தி வருகிறோம். மோர் மிளகாய் என்பது கோடை காலங்களில் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றாக உள்ளது.

மிளகாய் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்ததாக தொல்லியல் துறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிளகாயில் குடை மிளகாய், சீமை மிளகாய், இனிப்பு பனானா, பிமென்டோ, பப்ரிகா, பொப்பிலானோ, ரெல்லானோ என்று பல வகைகள் உள்ளன. மேலும் சன்னம் மிளகாய், அதிசய கார மிளகாய், LC 334, படகி, ஜீவலா போன்ற இந்திய மிளகாய் வகைகளும் உள்ளது. 100 கிராம் மிளகாயில் மாவு பொருள் 8.8 கிராம், சர்க்கரை 5.3 கிராம், பொட்டாசியம் 322 மில்லிகிராம் அளவில் உள்ளது. இதில் வைட்டமின்கள் A, B6, C மற்றும் இரும்பு சத்து போன்றவை உள்ளது. இதில் கரோட்டினாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் போன்ற நோய் எதிர்ப்புப் பொருட்கள் அதிக அளவு உள்ளன. இதிலுள்ள பொட்டாசியம் இதயநல ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக உள்ளது.

மிளகாயின் மருத்துவ பயன்கள்

மிளகாயின் மருத்துவ பயன்கள் அளப்பரியது. பொதுவாக இதை காயாகவும், பழமாகவும் பயன்படுத்தலாம். இதயத்திற்கு தேவையான வெப்பத்தை உண்டாக்குவது, பசியை தூண்டுதல், உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை ஏற்படுத்துதல் (Anti oxidant) ஆகியவற்றுக்கு இது பயன்படுகிறது. மிளகாயில் கேப்சைசின் (Capsaicin) என்கிற முக்கியமான வேதிப்பொருள் உள்ளது. இது எரிச்சலை உண்டாக்கி (Counterirritant) நோயை நீக்கும் தன்மையுடையது. நரம்பு வலிகள், நீரிழிவு நோயில் காணும் நரம்பு கோளாறுகள், மூட்டுவலி போன்ற பிரச்னைகளை குணமாக்குவதோடு சளி, இருமல், தொண்டைபுண், தலைவலி, தோல் நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்களை போக்க மிளகாய் உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குவதோடு இதய நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. இதயத்தில் உள்ள நரம்புகளுக்கு (Capsaicin-sensitive sensory nerves) உரமாக உள்ளது. இது ரத்தத் தட்டுகள் உறைவதை தடுக்கிறது.

இதன் காரணமாக இதய அடைப்பு தடுக்கப்படுகிறது. மிளகாய் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் உள்ள Capsanthin என்கிற பொருள் பிளாஸ்மாவில் HDL என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. குடைமிளகாயில் வைட்டமின் C அதிகளவு உள்ளது. இது ரத்த ஓட்டத்தை சரிசெய்யவும் வீக்கத்தைக் குறைக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கவும் உதவுகிறது. மேலும் இது நல்ல பசியைத் தூண்டும் உணவாகவும், செரிமானம் அடையச் செய்யும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மிளகாயின் பயன்பாடு பற்றி சித்த மருத்துவத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அது உமிழ்நீரை பெருக்கி நம் வாயிலுள்ள கழிவுகளை நீக்குவதில் சிறந்தது. மிளகாய் குடிநீர் செய்து இரண்டு வேளை கொடுத்தால் மார்பு நோய், வயிற்று நோய், செரியாமை, வாந்தி பிரச்னைகள் நீங்கும். தோலின் மேல் பூச வீக்கம் கரையும். தொண்டைக்கு வெளியில் பூச கட்டிகள் உடையும். முதுகு, தலையின் பின்புறம் உண்டாகும் நாட்பட்ட வலிகளுக்கு இதனை பூண்டு, மிளகோடு சேர்த்து நல்லெண்ணெய் குழைத்து பூச வலி நீங்கும்.

மிளகாய் பொடியுடன் சர்க்கரை, கருவேலம் பிசின் சேர்த்து வாயிலிட்டு சுவைக்க தொண்டை கம்மல் நீங்கும். மிளகாய் குடிநீருடன் இஞ்சிச்சாறு சேர்த்து அளவோடு கொடுக்க வயிற்று உப்பிசம், வயிற்று வலி நீங்கும். மது அருந்துபவர்களுக்கு அப்பழக்கத்தை மறக்கடிக்க மிளகாய், இலவங்கப்பட்டை, சர்க்கரை சேர்த்து குடிநீராக கொடுக்கலாம். இதை அளவோடு உண்டு வந்தால் ஆண்மை பெருக உதவும். ஆனால் அதிகளவு சாப்பிடும் பொழுது மூலம், எருவாய் கடுப்பு பிரச்னைகள் உண்டாகும். மிளகாயின் அதிக கார்ப்பு தன்மை உடலுக்கு சிலநேரம் ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே அதன் கார்ப்பை தணிக்க நம் முன்னோர்கள் சமஅளவு கொத்தமல்லி விதையை சேர்த்து உணவில் பயன்படுத்துகின்றனர். மிளகாயில் அதிகளவு அஸ்கார்பிக் அமிலம் உள்ளது.

அதேபோல கொத்தமல்லி விதையில் வைட்டமின் C அதிகளவு உள்ளது. இப்படி ஒன்றுக்கொன்று எதிரான பொருட்களை சேர்ப்பதன் மூலம் மிளகாயின் தீய குணம் தவிர்க்கப்படுகிறது. நாம் மிளகாய் பயன்படுத்தும்போது வயிற்று எரிச்சல் ஏற்பட்டால் அதை குறைக்க தேங்காய் பால் அருந்தலாம். மிளகாயில் உள்ள நுண் சத்துக்கள் நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் நன்கு வேலை செய்கிறது. இதை கணித்த நம் முன்னோர்கள் எல்லா கார வகை உணவுகளிலும் இதை சேர்த்துள்ளனர். மிளகாய் அயல்நாட்டிலிருந்து வந்திருந்தாலும், அளவோடு பயன்படுத்தி வந்தால் நம் உடலுக்கு பாதுகாப்பானது என்பதோடு நோயில்லா வாழ்வு வாழ நமக்கு ஏதுவாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தொகுப்பு: க.கதிரவன்

0 Response to "மிளகாய்னா காரம் மட்டுமே இல்லைங்க"

Post a Comment