பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பை தாய்மொழியில் பயிற்றுவிக்க, மத்திய அரசு திட்டம்

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பை தாய்மொழியில் பயிற்றுவிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்களின் கருத்தை அறிய ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆன்லைனில் ஆய்வு ஒன்றை நடத்தியது. நாடு முழுவதும் 83,195 பேர் பங்கேற்ற இந்த ஆய்வில், அதிகபட்சமாக தமிழில் இளங்கலை பொறியியல் பயில 12,000க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கடந்த 2010ம் ஆண்டு முதலே தமிழகத்தில், சிவில் மற்றும் மெக்கானிக்கல் துறை பொறியியல் படிப்புகள் தமிழில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலை மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில், குறிப்பிட்ட இரு துறைகளுக்காகவும், 1300-க்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதேசமயம், ஒவ்வொரு ஆண்டும் அவற்றில் வெறும் 20 முதல் 30 சதவித இடங்கள் மட்டுமே நிரம்புகின்றன என்பதே உண்மை.

வேலைவாய்ப்பில் சிக்கல்களை எதிர்கொள்வதோடு, உயர் கல்விக்கான கேட் போன்ற தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறுவதாலும், தமிழில் பொறியியல் பயில மாணவர்கள் தயக்கம் காட்டுவதாக கல்வி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில், நாடு முழுவதும் ஒரே மொழி பெரும்பான்மையாக பேசப்படுவதால். தாய்மொழியில் பொறியியல் பயில்வது சாத்தியமாகியுள்ளது.

அதேசமயம், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தாய்மொழி வேறுபட்டு உள்ளது. இந்த சூழலில் தமிழ் மொழியில் பொறியியல் பயின்ற ஒருவரால், பிற மாநிலங்களில் தங்களது பணியை தக்க வைத்துக் கொள்ள முடியுமா? என்பதும். தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை தாய் மொழியில் பயிலும்போது, சர்வதேச அளவில் ஒருவரால் ஜொலிக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

0 Response to "பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பை தாய்மொழியில் பயிற்றுவிக்க, மத்திய அரசு திட்டம்"

Post a Comment