செய்முறை தேர்வு! பிளஸ் 2 மாணவர்களுக்கு 154 மையங்களில்... கொரோனா கட்டுப்பாடுகளோடு நடத்த ஏற்பாடு

விழுப்புரம் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ - மாணவியர்களுக்கான செய்முறை தேர்வுகள் வரும் 16ம் தேதி முதல் 154 மையங்களில் நடைபெற உள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே மாதம் துவங்கு கிறது. இத்தேர்வின் ஒருபகுதியான செய்முறை தேர்வுகள் வரும், 16ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. இந்த செய்முறைத் தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் 184 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து 173 மாணவ, மாணவிகளுக்கு 154 மையங்களில் நடைபெற உள்ளது.

இந்த தேர்வை கொரோனா கட்டுப்பாடுகளோடு நடத்துவது தொடர்பாக அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம், நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா தலைமை தாங்கினார். இதில், செய்முறை தேர்வு மையங்களுக்கான புறத்தேர்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, 821 ஆசிரியர்களுக்கான பணியாணை வழங்கப்பட்டது.

கூட்டத்தில், தலைமை ஆசிரியர்கள், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றி செய்முறை தேர்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டனர்.தேர்வு மையத்திற்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன், தர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்திட வேண்டும். மேலும், சானிடைசர் அல்லது சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகே மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

இதற்காக நுழைவு வாயிலில் சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்வு மையங்களை தினசரி தேர்வு துவங்கும் முன்பும், முடிந்த பின்னரும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். இந்த நெறிமுறைகளை காட்டாயம் அனைத்து தேர்வு மையங்களிலும் கடைபிடிக்க அறிவுறுத்தப் பட்டது. மேலும், தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணித்திட உள்ளனர்.

0 Response to "செய்முறை தேர்வு! பிளஸ் 2 மாணவர்களுக்கு 154 மையங்களில்... கொரோனா கட்டுப்பாடுகளோடு நடத்த ஏற்பாடு"

Post a Comment