தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2021 (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)

2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலைச் சிறப்பாக நடத்துவீர்கள். பொருளாதாரத்திலும் மேன்மையைக் காண்பீர்கள். போட்டிகளையும் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். எவரையும் அலட்சியப்படுத்தாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

உங்களின் தன்னம்பிக்கை உயரும். தெளிந்த மனதுடன் பணியாற்றுவீர்கள். உங்களை சந்தேகப்பட்ட நண்பர்கள் மனம் மாறி வந்து உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவீர்கள். ஆலயத் திருப்பணிகளிலும் கலந்து கொள்வீர்கள்.

பெற்றோர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்பட்டு மருத்துவச் செலவுகள் குறையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களைச் சந்தித்து அவர்கள் மூலம் புதிய தொடர்புகளையும் பெறுவீர்கள். புதிய நுணுக்கங்களை செய்தொழிலில் புகுத்துவீர்கள். மன அழுத்தங்களிலிருந்து விடுபடுவீர்கள். இதுவரை விற்காத நிலங்கள் விற்று, சேமிப்பு உயரக் காண்பீர்கள்.

ஐப்பசி மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் நன்றியுடன் இருப்பார்கள். உங்களுக்கு அசாத்திய துணிச்சல் உண்டாகும். உங்கள் சிந்தனையில் தெளிவு பிறக்கும். உங்களின் கற்பனை சக்தி அதிகரிக்கும்.

உங்கள் பெற்றோருக்கும் புகழ், கெüரவம் கிடைக்கும். சிறப்பாக விவாதித்து }மதியூகி} என்ற பெயர் எடுப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிறையும். இல்லத்தில் திருமணம், மழலை பாக்கியம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

திட்டமிட்ட காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கைகளில் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்ளும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டில் விரும்பிய பணி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைக்கும். தைரியமாக எந்த வேலையையும் செய்ய முன்வருவீர்கள். மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அதிகமாக்கிக் கொண்டு செயல்படுவீர்கள். சுற்றுலா சென்று வரும் யோகம் உண்டாகும். வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல முயற்சி செய்வோருக்கு அது நல்லபடியாக அமையும். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டது போல் செயல்படுத்தி வெற்றி அடைவீர்கள்.

வியாபாரிகள் இதுவரை இல்லாத புதிய துறையில் இறங்கி வெற்றிக்கொடிநாட்டுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். தங்களின் கூட்டாளிகள் பூரண ஒத்துழைப்பு நல்குவார்கள்.
விவசாயிகளுக்கு நிலத்தில் நீர் வரத்து அதிகமாக காணப்படுவதால் தகுந்த நேரத்தில் விதைத்து வளமையைப் பெறுவீர்கள். விளைச்சலும் விற்பனையும் அமோகமாக இருக்கும். கால்நடைகளால் விரும்பிய பலனைப் பெற முடியாமல் போகலாம்.

அரசியல்வாதிகளுக்கு உங்களின் எண்ணங்கள் சரியான காலகட்டத்தில் நிறைவேறும். அதேநேரம் அலைச்சலுக்கு குறைவிருக்காது. கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கலைத்துறையினர் பணவரவில் படிப்படியாக உயர்வினைக் காண்பீர்கள். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். சேமிப்பு விஷயங்களில் கருத்தாக இருப்பது நல்லது.
பெண்மணிகள் தங்களின் சகோதர, சகோதரிகள் வளம்பெறக் காண்பார்கள். உங்களின் செவியில் நல்ல செய்திகள் வந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.
மாணவமணிகள் பெற்றோர், ஆசிரியர்களிடம் நற்பெயர் எடுப்பார்கள். மனம் சிதறாமல் படிப்பிலும், விளையாட்டிலும் ஈடுபாட்டைக் கூட்டவும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம் - ஸ்ரீசீதாராமரை வழிபட்டு வரவும்.

*****

கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் செய்தொழில் சிறப்பாக வளர்ச்சி அடையும். உங்கள் திறமைகளை நல்லபடியாக வெளிப்படுத்துவீர்கள். பொருளாதாரத்தில் இருந்த குளறுபடிகள் அனைத்தும் தீர்ந்து நிலைமை சீரடையும்.

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நிறுத்தியிருந்த வேலைகளை எடுத்து மீண்டும் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்துடன் விருந்து, பழைய இழப்புகளையும் நஷ்டங்களையும் சரிசெய்வீர்கள்.

உங்களுக்குக் கீழ் வேலை செய்யும் உதவியாளர்களின் ஆதரவும் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் குறைகளைச் சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொள்வீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத சலுகைகளும், உதவிகளும் தேடிவரும். உடன் பிறந்தோரும் உங்களிடம் அனுசரித்து நடந்து கொள்வார்கள்.

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பெரிய பொறுப்புகளை ஏற்று நடத்துவீர்கள். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் உங்கள் கெüரவம், அந்தஸ்து உயரும்.

குழந்தைகளின் வளர்ச்சியும் அதிசயிக்கத்தக்க வகையில் இருக்கும். அவர்களாலும் சமுதாயத்தில் }இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்} என்கிற குறள் வகையில் புகழ் உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய அசையும் அசையாச் சொத்துக்களையும் வாங்குவீர்கள்.

பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். புதிய திறமையானவர்களை உதவிக்கு வைத்துக் கொள்வீர்கள். அன்னை வழி உறவினர்களாலும் உங்களுக்கு நன்மை உண்டாகும். அதேநேரம் வயிறு சம்பந்தப்பட்ட சிறிய பிரச்னையும் தோன்றி மறையும் காலகட்டமிது.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டில் அலுவலகத்தில் நிகழும் இறுக்கமான சூழ்நிலைகளும் சற்று மாறும். பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்கள் தங்களின் அசாத்திய துணிச்சலால் வெற்றியைப் பெறுவார்கள். மேலதிகாரிகளின் பாராட்டு உங்களுக்கு கிடைக்கும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்களும் உண்டாகலாம்.

வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வங்கி கடன்கள் கிடைக்கப்பெற்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வராது என்று நினைத்திருந்த பணம் கை வந்து சேரும். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்க நினைப்பீர்கள். விவசாயிகளின் செயல்கள் படிப்படியாக நல்ல பலன்களைக் கொடுக்கத் தொடங்கும். விவசாய பொருள்களை உடனுக்குடன் சந்தைகளுக்கு எடுத்துச் சென்று நல்ல முறையில் விற்பனை செய்வீர்கள். வருமானத்தை அதிகரிக்க மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து லாபம் அடையலாம்.

அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் தேடி வரும். எந்த வேலையையும் நன்றாகத் திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள். தொண்டர்களின் ஒத்துழைப்பும் நன்றாக இருக்கும். உங்கள் எண்ணங்களைச் செயலாக்குவதில் தடைகள் இராது.

கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு எதிர்பார்க்கும் அளவுக்கு இராது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உழைப்பை அதிகரித்தால் புகழ் பெறலாம்.
பெண்மணிகளுக்கு மனக் குழப்பங்கள் ஏற்பட்டு பின்பு விலகும். கணவரிடம் சுமூகமான உறவு இருந்தாலும் அதை மேம்படுத்திக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இளைய சகோதர, சகோதரிகளால் நன்மைகளைப் பெறுவீர்கள். எவர் மனதையும் புண்படுத்தாமல் பேசிப் பழகி வரவும். வீட்டிற்குத் தேவையான உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவமணிகள் கடுமையாக உழைத்து மாநில அளவில் சாதிக்கும் யோகத்தை அடைவீர்கள். விளையாட்டுகள், யோகா, பிராணாயாமம் போன்றவற்றைத் தவறாமல் செய்து வரவும். பெற்றோர் ஆதரவுடன் சில கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம் - ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.

*****

துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் செய்தொழில் சீராக நடந்தாலும் புதிய மாற்றங்கள் எதையும் கொண்டு வர இயலாது. பயணங்களால் நன்மைகள் ஏற்படாவிட்டாலும் அவை தவிர்க்க முடியாதவையாக அமையும். தடைபட்டிருந்த செயல்களை எப்பாடுபட்டாவது முடித்து விடுவீர்கள். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கவும்.

உற்றார் உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள். அவர்களால் எந்த உதவியையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. வழக்குகளின் மூலம் பழைய காலத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். இதனால் புதிய சூழ்நிலையில் ராஜ நடை போடுவீர்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வாகன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். மாற்றி யோசித்து சிந்தனைகளைச் செயல்படுத்துவீர்கள். நண்பர்கள் மத்தியில் உங்கள் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் தேக ஆரோக்கியம் மேம்படும். பெற்றோர் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையத் தொடங்கும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் ரகசியங்களை எவரிடமும் வெளியிட மாட்டீர்கள்.

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து, எப்பாடுபட்டாவது முடித்து விடுவீர்கள். வருமானத்திற்கு எந்தக் குறைவும் ஏற்படாது. மறைமுக எதிர்ப்புகள் தானாகவே விலகிவிடும். நண்பர்கள் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடப்பார்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் கை வந்து சேரும்.

சமூகத் தொண்டுகள் மூலம் புகழ், கெüரவம் உயரும். பிள்ளைகளின் புத்திசாலித்தனமும் கூடும். அவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். எவரிடமும் அநாவசியப் பேச்சுக்களை வைத்துக்கொள்ள வேண்டாம். பழைய காலத்தில் திருடு போன அல்லது காணாமல் போயிருந்த பொருள் திரும்பவும் கிடைத்துவிடும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களின் அலுவலகப் பணிகள் அனைத்தும் தொய்வில்லாமல் முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கப்பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவும் நட்பும் அதிகரிக்கும்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். கூட்டாளிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். வழக்கு வியாஜ்யங்களில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

விவசாயிகளுக்கு மகசூல் லாபம் அதிகரிக்கும். விளை பொருள்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்ய முனைவீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்லலாம்.

அரசியல்வாதிகளிடம் தங்கள் கட்சியினரும் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். இதனால் மனம் தளராமல் பணியாற்றுவீர்கள். கட்சித் தலைமையிடம் உங்கள் நெருக்கம் அதிகரிக்கும். சண்டை சச்சரவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க பொறுமையுடன் இருக்கவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும்பண வரவுக்கு குறைவிருக்காது.

பெண்மணிகள் புதிய ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். அதே நேரத்தில் உடலில் சோர்வும் ஏற்படும். பிறரிடம் பேசும்பொழுது கோபமாக வார்த்தைகளைக் கொட்டாதீர்கள். கணவரை அனுசரித்து நடக்கவும்.

மாணவமணிகள் கல்வியில் நல்ல வெற்றியை அடைவீர்கள். உங்களின் அணுகுமுறையில் தெளிவான மாற்றங்கள் உண்டாகும். போட்டி, பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி காண்பீர்கள்.

பரிகாரம் - ஸ்ரீதிருவேங்கட நாதனை வழிபட்டு வரவும்.

*****

விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் தாங்கள் எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் குறிப்பறிந்து காரியமாற்றுவார்கள். உங்களை நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு வெற்றி காண்பீர்கள். அனைவரிடமும் தந்திரமாகப் பேசி உங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். நீதி, நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். குழந்தை இல்லாதவருக்கு மழலை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். செய்தொழிலில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் காரியம் ஒன்று நடக்கும். இதனால் குடும்பத்தில் எதிர்பாராத குதூகலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். செய்தொழிலில் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். நல்லவர்களின் சகவாசத்தை தேடிப் பெறுவீர்கள். வீடு, நிலங்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

உங்களின் தனித் திறமையும், தன்னம்பிக்கையும் கூடும். அரசாங்கத்திடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, அரசு அதிகாரிகள் உங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வார்கள். பழைய கடன்களையும் முழுமையாக அடைக்கும் அளவுக்கு பணவரவு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு மிகவும் சாதகமாகவே இருக்கும். சிலருக்கு வேலை நிமித்தமாக வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் புதிய துறைகளில் பணியாற்றவும் வாய்ப்பு உருவாகலாம். பதவி உயர்வுடன் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கும் பாத்திரமாவீர்கள். உங்களின் கெüரவம் உயரும்.

வியாபாரிகள் போட்டி நிமித்தமாக அதிகமான அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். உங்களிடம் வேலை பார்க்கும் பிரதிநிதிகளும் உங்களுக்கு தலைவலியை உண்டு பண்ணுவார்கள். கவனமாக இருக்கவும். வியாபாரத்தை கவனிக்க முடியாத அளவுக்கு குடும்பப் பொறுப்புகள் சூழும். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளும், விரோதங்களும் குறையும்.

விவசாயிகளுக்கு விளைநிலங்களால் லாபம் உண்டாகும். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். கால்நடைகளுக்கு சற்று கூடுதலாகச் செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் தாங்கள் எதிர்பார்த்த நற்காரியங்களில் வெற்றி கிடைக்கும். பெயர், புகழ் உயரும். தொண்டர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் தூரப் பயணம் செய்ய வாய்ப்பு ஏற்படும். உங்களைக் கவிழ்க்க நினைக்கும் எதிரிகள் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளவும்.

கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எதையும் திறம்பட முடிக்க முயற்சி செய்வீர்கள். ரசிகர்கள் ஆதரவு பெருகும்.
பெண்மணிகள் தங்கள் குடும்ப நலம் சீராகவும், ஒற்றுமையாகவும் இருக்கக் காண்பார்கள். பெற்றோர்களின் ஆதரவும், அவர்களால் தன லாபங்களும் கிடைக்கும். வீடு கட்டும் யோகமும், பொன் பொருள் சேர்க்கையும் உண்டாகும். வீட்டில் சுபகாரியங்களுடன், பூரண லட்சுமி கடாட்சமும் கிடைக்கப்பெறுவீர்கள்.

மாணவமணிகள் சிலருக்கு வெளிநாடு சென்று கல்வி கற்கும் யோகம் உண்டாகும். எளிதாகப் பாடத்தைப் புரிந்து கொள்ள அதிகாலையில் எழுந்து படிப்பீர்கள். தீய நண்பர்களைக் கண்டறிந்து தவிர்த்து விடுவீர்கள். உடல் நலத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம் - ஸ்ரீ ராதாகிருஷ்ணரை வழிபட்டு வரவும்.

0 Response to "தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2021 (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)"

Post a Comment