மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக்கின் உயிர் இன்று(ஏப்., 17) காலை பிரிந்தது. சினிமாவில் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த இவர், மறைந்தது தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் இவர் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்ப்போம்.சின்னக் கலைவாணர் என்று அனைவராலும் அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படும் நடிகர் விவேக்கின் இயற்பெயர் விவேகானந்தன். 1961ம் ஆண்டு நவ., 19ல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அங்கய்யா - மணியம்மாள் ஆகியோரின் மகனாக பிறந்தார்.
பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே முடித்தவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம் பட்டம் பெற்றார். திரைத்துறைக்கு வருவதற்கு முன் மதுரையில் டெலிபோன் ஆபரேட்டராகவும் அதன்பின் சென்னை வந்து டிஎன்பிஎஸ்ஸி குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று தலைமைச் செயலகத்தில் இளங்கலை உதவியாளராகவும் பணியமர்த்தப்பட்டார்.
இடையிடையே மெட்ராஸ் ஹ்யூமர் கிளப்பில் பங்கெடுத்து ரசிகர்கள் முன்னிலையில் நகைச்சுவை நிகழ்ச்சியும் நிகழ்த்தி வந்தார். கே.பாலசந்தர் அறிமுகம்இந்த ஹ்யூமர் கிளப்பின் நிறுவனரான பி.ஆர்.கோவிந்தராஜன் மூலம் இயக்குநர் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைத்து, 1987ஆம் ஆண்டு வெளிவந்த "மனதில் உறுதி வேண்டும்" திரைப்டத்தில் ஸ்கிரிப்ட் உதவியாளராக இருந்ததோடு மட்டுமின்றி கதையின் நாயகி சுஹாசினியின் சகோதரனாக நடிக்கும் வாய்ப்பினை பெற்று ஒரு நடிகனாக தமிழ் திரையுலகிற்கு இயக்குநர் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பாலசந்தரின் புது புது அர்த்தங்கள், "ஒரு வீடு இரு வாசல்" ஆகிய படங்களிலும் பிற இயக்குநர்கள் இயக்கத்தில் வெளிவந்த "கேளடி கண்மனி, நண்பர்கள், இதயவாசல், புத்தம் புது பயணம்" என இவர் நடிப்பில் வந்த படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கின.
90களுக்கு பின் திருப்பம்"வீரா, உழைப்பாளி" போன்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்களில் தோன்றி நடித்திருந்தாலும் பெரும்பாலும் நண்பர்களில் ஒருவராக வரும் கதாபாத்திரமாகவே இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும். ஒரு தனி நகைச்சுவை நடிகனாக தன்னை அடையாளம் காட்ட நடிகர் விவேக்கிற்கு கணிசமான காலம் தேவைப்பட்டது என்றே கூற வேண்டும்.
90களின் பிற்பகுதியில் வெளிவந்த "காதல் மன்னன்", "உன்னைத்தேடி', வாலி போன்ற அஜித் படங்களிலும், பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த "கண்ணெதிரே தோன்றினாள்", "பூமகள் ஊhவலம்", "ஆசையில் ஓர் கடிதம்" போன்ற படங்களில் நாயகனின் நண்பனாக வந்து நகைச்சுவையில் தனி முத்திரை பதித்தார். பின்னர் வந்த "குஷி", "மின்னலே","டும் டும் டும்", ரன், "தூள்", "சாமி", "பார்த்திபன் கனவு" ஆகிய படங்களின் மூலம் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியா தனிப் பெரும் நகைச்சுவை நடிகராக வலம் வரத் தொடங்கினார்.
200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள விவேக் நான்தான் பாலா, வெள்ளை பூக்கள் போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஓரிரு படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர்தான் ஏற்று நடிக்கும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நகைச்சுவையோடு சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கூறி தனது ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார் நடிகர் விவேக். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பிறகு திரைப்படத்தில் சீர்திருத்தக் கருத்துக்களை துணிவோடு எடுத்துரைத்தவர் நடிகர் விவேக்.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், ஜாதி மத வேறுபாட்டிற்கு எதிராகவும், லஞ்ச லாவண்யங்களுக்கு எதிராகவும், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் அவலங்களையும், தண்ணீர் பிரச்னை, இயற்கை சீரழிவு, அரசியலில் நிலவும் ஊழலையும் தனது நகைச்சுவை நடிப்பில் வசனங்களாக உதிர்த்து திரைமொழியால் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை தந்தார் என்றால் அது மிகையன்று. மரக்கன்று ஆர்வம்சினிமாவில் தான் பேசி நடித்த சமூக சீர்திருத்தக் கருத்துக்களை சினிமாவோடு விட்டு விடாமல் தனது நிஜ வாழ்விலும் கடைபிடித்து வந்தார் நடிகர் விவேக். உதாரணத்திற்கு நாட்டின் வறட்சிக்கு காரணம் மழையின்மை. மழையின்மைக்கு காரணம் மரங்களின் அழிவு.
மரங்களின் அழிவுக்கு காரணம் நாம். எனவே செழிப்பான நாட்டை உருவாக்க நாடு முழுவதும் மரம் நடவேண்டும் என்ற கொள்கையை எடுத்துரைக்கும் வகையில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவேன் என கூறி நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதையும் தனது நிஜ வாழ்வில் சாத்தியப்படுத்தி வருவதோடு பிறருக்கு ஓரு வழிகாட்டியாகவும் வாழ்பவர் நடிகர் விவேக். மகன் இறப்பு தந்த சோகம்மறைந்த நடிகர் விவேக்கிற்கு அருள்செல்வி என்ற மனைவியும், தேஜஸ்வினி என்ற மகளும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் இவரது மகன் பிரசன்ன குமார் இறந்துவிட்டார்.
அந்த சமையத்தில் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருந்தார். அதனால் சில ஆண்டுகள் சினிமாவிலும் அவர் ஜொலிக்கவில்லை. பின் அதிலிருந்து மீண்டு, மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மீது அதீத அன்பு கொண்டவர் நடிகர் விவேக்.
அவரை முன்மாதிரியாக கொண்டு தன் வாழ்க்கையில் பல விஷயங்களை மாற்றிக் கொண்டவர். அதோடு அப்துல் கலாமின் பசுமை இந்தியா திட்டத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றதில் விவேக்கிற்கு முக்கிய பங்கு உண்டு. தான் எங்கு பேச சென்றாலும் அப்துல் கலாமை நினைவுக்கூறாமல் அவர் பேசியது குறைவே என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் மீது பற்று கொண்டிருந்தார். "கோபால், கோபால்", "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்", "இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்" இதுபோல் இவரால் பேசப்பட்ட பல வசனங்கள் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்றளவும் நிலையன ஓர் இடத்தை பிடித்திருக்கின்றார் என்பதே உண்மை.
0 Response to "விவேக்கும்... சினிமாவும்...! - ஓர் பார்வை"
Post a Comment