சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1% குறைந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.1 சதவீதமாக உள்ளது. மாணவிகள் 94.1 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் அடிப்படையில் 97 சதவீதம் தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 96.3 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் 2வது இடத்திலும், 96.1 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் 3வது இடத்திலும் உள்ளன. 1907 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தோல்வியுற்ற மாணவர்கள் துவண்டு விட வேண்டாம். ஜூன் 25 ம் தேதி ப்ளஸ் 2 மறுதேர்வு நடைபெறும். மாணவர்கள் அனைவருக்கும் இன்று பிற்பகல் 2 மணிக்குள் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். தனியார் பள்ளிகளில் சிறந்த மாணவர்களின் புகைப்படங்களை விளம்பரங்களாக வெளியிடக் கூடாது.
மீறும் தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.