கல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி: முதல்வர் கே.பழனிசாமி பெருமிதம்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவர்களுக்கு காலணி முதல் மடிக்கணினி வரை விலையில்லாமல் வழங்கியதால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில்
தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அபாரமாக உள்ளது என்று முதல்வர் கே.பழனிசாமிபேசினார்.கோவில்பட்டியில் குடிநீர் திட்டப் பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ளச் செல்லும் வழியில் முதல்வர் பழனிசாமிக்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தேவர் சிலை அருகே அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அன்னதானத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேசியதாவது:

தமிழகத்தைப்போல் சிறந்த கல்வித் திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. விலையில்லா காலணி, புத்தகப் பை, நோட்டுப் புத்தகம், சைக்கிள் மட்டுமின்றி மடிக்கணினி வரை ஜெயலலிதா வழங்கினார். இதன் மூலம் 36 லட்சம் மாணவர்கள் பலனடைந்தனர். தமிழகம் கல்வித் துறையில் அபார வளர்ச்சியை பெற்றதற்கு இதுவே முக்கிய காரணம்.கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் அடிப்படை தேவைகளை அரசு தொடர்ந்து நிறைவேற்றும். மக்கள் சேவையாற்றிய பசும் பொன் முத்துராமலிங்கத் தேவ ரின் கனவை அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்றார்.