நவீனத்தை கற்று தரும் பள்ளிப் பாடம் வந்துவிட்டது

 
அடுத்த தலைமுறை ‘ஸ்மார்ட்’ தலைமுறையாக உருவாக தமிழக அரசு பள்ளி பாடத்திட்டத்தை நவீனப்படுத்தி விட்டது. பாட முறைகளிலும், பாட விவரங்களை அறிந்து கொள்வதிலும் இந்த தலைமுறைக்கு பரிச்சியமான பல பாடப்புத்தகத்திலும் வந்துவிட்டது.

தமிழக அரசு வெளியிட்ட 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளன.

பாடநூல்களில் வழக்கமாக இடம்பெற்றிருக்கும் தகவல்களுடன் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதி பெட்டிச் செய்தி போன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட பாடத்தில் உள்ள விஷயங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு க்யூ.ஆர்.குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. அதை ஆண்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்வதன் மூலம் பாடம் குறித்து இணையதளத்தில் ஏற்கெனவே உள்ள கருத்துகள், காணொலிக் காட்சிகள் (யு-டியூப்), படங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.

மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் ‘டேப்லெட்’, கணினி, கணினி தொடுதிரை போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்காக ‘இன்பர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி’ என்ற தொழில்நுட்பம், வகுப்பறைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பாடநூல்களில் ஒவ்வொரு பாடங்கள் தொடர்பாகவும் கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக இணையதள முகவரிகள் இடம்பெற்றுள்ளன.

பாடநூலின் பின்பகுதியில் முக்கிய கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் சொற்களஞ்சியம் பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பகுதியில் அந்தப் பாடம் இடம் பெற்றதற்கான காரணம் – பாடத்தில் குறிப்பிட்டுள்ள விஷயம் தொடர்பாக உயர் கல்வியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்ற தகவல் இடம்பெற்றுள்ளன.

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழில்துறையில் பெற்றுள்ள வளர்ச்சியையே சார்ந்து இருக்கும். அதை தான் சீனா, ஜப்பான் நாடுகளில் பார்த்து வியக்கிறோம்.

தொழில் வளர்ச்சிக்கு மிக அவசியமானது கல்வி, அதில் தொழிற்கல்வி மிக அவசியமான அங்கமாகும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றில் ஈடுபாடு காட்ட வைத்துவிட்டால் பிற்காலத்தில் அம்மாணவன் எதை படித்தால் நல்லது? என யோசிக்கும்போது, தனது ஆர்வம் எதில் இருக்கிறது என்பதை தெளிவாக கூறும் நாள் வரும்!

இன்றைய சமுதாயம் கணினி புரட்சியால் இயங்கிக் கொண்டு இருப்பதால் எத்தொழில்துறையில் நுழைந்தாலும் அதில் கணினி அறிவு நிச்சயம் தேவைப்படுகிறது.

விவசாயம், மருத்துவம், பொறியியல், வரலாறு என்று எந்த படிப்பை மேற்கொண்டாலும் இனி கணினி பயிற்சியின்றி செயல்பட முடியாத நிலை இருப்பதால் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எடுத்துள்ள புதிய முயற்சியை நாடே பாராட்டி வரவேற்கிறது