பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து!



2017ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சரியானதே என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 பணியிடங்களை நிரப்புவதற்குக் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றுத் தேர்வு முடிவுகள் நவம்பர் 7 அன்று வெளியிடப்பட்டது. ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் 2,200 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்தத் தேர்வு முடிவில் முதலில் வெளியிட்ட மதிப்பெண்ணுக்கும், ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகலில் உள்ள மதிப்பெண்ணுக்கும் 60 முதல் 80 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.

தேர்வு எழுதியவர்களில் 196 பேரிடமும் தலா ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பெற்றுக்கொண்டு மதிப்பெண் திருத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு ஆணையம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.

நேற்றைய விசாரணையில் தேர்வில் தேர்ச்சி பெற 48 லட்சம் ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாலேயே தேர்வை ரத்து செய்ததாக தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், முறைகேடு குறித்து சைபர் கிரைம் நடத்திய விசாரணையின் ரகசிய அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர்கள், முறைகேடு செய்ததாக கூறப்படும் 196 பேரைத் தவிர்த்து தேர்வெழுதிய மற்றவர்களுக்குத் தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வாதிட்டனர் .

இதை ஏற்க மறுத்த நீதிபதி, புற்றுநோய் போல பெருகிவரும் ஊழல்களே நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருப்பதாகக் கருத்து தெரிவித்தார். இந்த முறைகேட்டில் ஏராளமான நபர்களுக்குத் தொடர்பிருப்பதால், தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சரியானதே எனத் தெரிவித்து அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்